0

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மறுபடி அதிக விலைக்கு விற்பனைக்கு வருகிறதே... அதுதான் ஆரோக்கியமானதா? ஆலிவ் ஆயில் உபயோகிப்பது எந்த அளவு சிறந்தது?

இயற்கை ஆர்வலர் வெள் உவன்

எள்ளுடன் கருப்பட்டி சேர்த்து கல் செக்கில்  மர உலக்கை கொண்டு, மாடுகள் பூட்டி ஆட்டிய எண்ணெய் கடந்த சில  தலைமுறைகளுக்கு முன்பு வரை வழக்கத்தில் இருந்தது. இவ்வளவு எள்ளுக்கு இவ்வளவு கருப்பட்டி சேர்க்க வேண்டும் என ஒரு கணக்கு இருக்கும். இந்த முறையில் எண்ணெய் தனியாகவும் சக்கை தனியாகவும் வரும். அந்தச் சக்கையைத்தான் எள்ளுப் புண்ணாக்கு என்பார்கள்.

இப்போது கல் செக்கு என்றாலே அரிதாக இருக்கிறது. எக்ஸ்பெல்லர் என்கிற எந்திரத்தை வைத்து, கருப்பட்டிக்குப் பதிலாக  மொலாசஸ்  என்கிற பாகு சேர்த்து எண்ணெய் எடுக்கிறார்கள். எந்திரத்தைப் பயன்படுத்துவதால் அதன் விளைவாக சூடு  உருவாகி, அதனால் எண்ணெயில் உள்ள சில நல்ல விஷயங்கள் கெட்டுப் போவதாக சொல்லப்படுகிறது. மாடுகளை வைத்து  செக்கை சுற்றிய காலமும் மாறி, இன்று மோட்டார் வைத்து இயக்குகிறார்கள். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது  செக்கில் ஆட்டப்படும் நல்லெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அந்தக் காலங்களில் பூப்பெய்திய பெண்களுக்கு அந்தத்  தகவல் அறிந்ததும் உள்ளங்கை முழுக்க நல்லெண்ணெய் விட்டு அப்படியே குடிக்கச் சொல்வார்கள். அதே போல குழந்தை பெற்ற பெண்களுக்கும் நல்லெண்ணெய் கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அது அவர்களது கர்ப்பப்பையை பலப்படுத்தும் என நம்பினார்கள். சமீப காலங்களில் பெண்கள் மத்தியில் பெருகி வருகிற கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் அதன் காரணமான கர்ப்பப்பை நீக்கத்துக்கும் இந்தப் பழக்கங்கள் காணாமல் போனதுகூட ஒரு காரணமோ என யோசிக்க வைக்கிறது.

ஆலிவ் எண்ணெய் என்பது நம் பாரம்பரியத்தில் வந்ததே இல்லை. அதை விளம்பரப்படுத்தி பிரபலப்படுத்துவதன் பின்னணியில்  மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. ஆலிவ் எண்ணெய்க்குப் பழகிவிட்டால் பிறகு அதன் தேவைக்கு நாம் வெளிநாடுகளைத்தான்  எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும்.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top