தென்னிந்திய பாரம்பரிய இந்திய உணவில் உடலுக்கு நலன் தரும் அனைத்து வகையான புரதச் சத்துகளும் அடங்கிய உணவு வகைகள் இடம்பெறும். இதில் சுரைக்காயை அனைத்து இல்லத் தரசிகளும் சமைப்பது வழக்கம். இருப்பினும் மார்க்கெட்டில் இதை வாங்கும்போது இரண்டாவது சிந்தனை அளிப்போரே அதிகம். உணவில் இதை எந்த வகையில் சமைப்பது என்பதுதான் அதற்குக் காரணம். அவ்விதம் நீங்கள் யோசித்தீர்களேயானால் அது இனிமேல் தேவையற்றது. சுரைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நலன் தரக்கூடியது. அதில் அனைத்து வகையானசத்துகளும் உள்ளன...’’ - சுரைக்காய் குறித்த சூப்பர் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி.
சுரைக்காயில் உள்ள நல்ல விஷயங்களைப் பட்டியலிட்டிருப்பதுடன், சுரைக்காயில் சூப்பர் ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர். ‘‘ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் சுரைக்காயை ‘அலாபு’ என்றும் சமஸ்கிருதத்தில் ‘காட்டுதும்பி’ என்றும் குறிப்பிடுவதோடு மிகச் சிறந்த மாயங்கள் புரியும் காய்கறியாக குறிப்பிட்டுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்தில் ‘சரக்கா சம்ஹிதா’ எனக் குறிப்பிடுகின்றனர். வாமணயோகத்தில் இது மிகச் சிறந்த மருந்துப் பொருளாகக் கருதப்படுகிறது. மிகச் சிறந்த சித்தரான அகஸ்தியர் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்களை தன் பாடலிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
ஆயுர்வேத மருத்துவம் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பின் வருமாறு பட்டியலிட்டுள்ளது. ரசா (சுவை): திக்தம் (கசப்பு), சில வைத்தியர்கள் இதற்கு இனிப்புச் சுவை உண்டு என்றும் கூறுகின்றனர். குணா (குணங்கள்): லகு (லேசான) மற்றும் ருக்ஷா (காய்ந்த).வீர்யா (வீரியம்): சீதம் (குளிர்ச்சி). விபகம் (சுவையானது எளிதில் ஜீரணமாகும்). கர்மா (செயல்): பித்த கப ஹாரம் (பித்தம், கபத்தை முறிக்கும்): வம்கம் (வாந்தியெடுப்பதை தடுக்கும்).விஷக்ணம் (நோய்முறி) மற்றும் விர்ஷ்யம் (பாலுணர்வு ஊக்கி).
புரதச் சத்துகள்
நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான புரதச் சத்துகள் சுரைக்காயில் உள்ளன. இரும்பு, மக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், ரிபோஃபுளோவின் (Riboflavin) உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. வீக்கத்தை தணிக்கும். உடலில் தங்கியுள்ள விஷச் சத்துகளை நீக்கும். குளிர்ச்சி தரும். நீர்ச்சத்து நிறைந்தது. குடலை சுத்தப்படுத்தும், சளி, கபத்தை நீக்கும்.
ஆயுர்வேதத்தில் சுரைக்காயின் மருத்துவ குணங்கள்
ஆயுர்வேத மருத்துவத்தில் சுரைக்காய் பித்தம், கபம், தோஷத்தை சமநிலையில் வைக்கும் குணம் உள்ள காயாகக் கருதப்படுகிறது. இது ரத்த திசுக்களை வலுப்படுத்தும். காய்ச்சலுக்கு மிகச் சிறந்த நிவாரணி, தலைவலி, சோர்வு, தீக்காயம், ஆஸ்துமா, நாள்பட்ட சளி, வலிப்பு, சிறுநீரகத்தில் கல், பித்தப்பையில் கல், அதீத கொழுப்பு ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த நிவாரணி.
சுரைக்காயிலிருந்து பல மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மஞ்சள் காமாலை, நீரிழிவு, மூலம், ரத்த அழுத்தம், கொழுப்பு, தோல் சார்ந்த நோய்கள், காய்ச்சல், மாரடைப்பு சார்ந்த உடல் பிரச்னைகளுக்கு இது மிகச்சிறந்த நிவாரணியாகும். பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இது ‘ரக்தமோக்ஷணம்’ என்று அழைக்கப்படுகிறது. காய்ந்த சுரைக்காய் ரத்த சுத்திகரிப்புக்கு பயன் படுத்தப்படுகிறது. சுரைக்காய் ஜூஸ், நாஸ்ய கர்மா எனப்படும் மூக்கடைப்பு உள்ளிட்டவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாகும். சுரைக்காய் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இலை கஷாயம் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. சுரைக்காயின் தண்டுப் பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் கொடி கஷாயம் ஓதம் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
வெளி உபயோகத்துக்கும் சுரைக்காய் மிகச்சிறந்த நிவாரணி. சுரைக்காயை அரைத்து முன் நெற்றியில் பற்று போட்டால், அதீத உடல் சூட்டினால் ஏற்படும் பித்தத்தைக் குறைக்கும். நரம்பு சார்ந்த பிரச்னைகளால் ஏற்படும் எரிச்சலைப் போக்க சுரைக்காய் கஷாயம் உதவும். உள்ளுக்கும் வெளிப்புறமும் பயன்படுத்தலாம். மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமையைப் போக்க சுரை குடுவை சுட்ட கறி மிகவும் பயனளிக்கக் கூடியது.
சுரைக்காயுடன் தேன் சேர்த்து அதை கண்ணுக்கு மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் இரவுக் குருடு ஏற்படுவதைத் தடுக்கலாம். சுரைக்காய் இலையுடன் பால் சேர்த்து இரவில் சாப்பிட்டால் மறதி நோயைத் தவிர்க்கலாம்.
பழங்காலத்தில் சுரைக்காய் ஓட்டில் குடிநீர் சேகரிப்பது வழக்கமாக இருந்தது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவியது. ஆயுர்வேத மருத்துவர்கள் சுரைக்காயில் பல்வேறு மருந்துகளை தயாரிக்கின்றனர். இருப்பினும் மருத்துவ ஆலோசகரின் அறிவுரை இல்லாமல் இதை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது சரியல்ல.
சுரைக்காய் அல்வா
தேவையானவை :
சுரைக்காய் - 750 கிராம், பால் - அரை லிட்டர், பனை வெல்லம் - 300 கிராம், ஏலக்காய் - 2 கிராம், நெய் - 50 மி.லி., முந்திரி, திராட்சை - தலா 20 கிராம்.
செய்முறை :
சுரைக்காயைத் தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும். அதை பாலில் வேக வைக்கவும். பனை வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கரைத்து, லேசாகக் கொதிக்க வைத்து, சுரைக்காய் கலவையில் விட்டுக் கிளறவும். தண்ணீர் வற்றியதும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்க்கவும்.
சுரைக்காய் வேர்க்கடலை மசாலா
தேவையானவை :
சுரைக்காய் - அரை கிலோ, எண்ணெய் - 10 கிராம், பச்சை மிளகாய் - 5 கிராம், வெங்காயம் - 300 கிராம், ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 100 கிராம், மஞ்சள் தூள் - 10 கிராம், சீரகத் தூள் - 15 கிராம், மிளகுத் தூள் - 10 கிராம், கொத்தமல்லி - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
சுரைக்காயைத் தோல், விதை நீக்கி நறுக்கவும். எண்ணெயை சூடாக்கி, பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கியதும், சுரைக்காய் சேர்க்கவும். சுரைக்காய் வெந்ததும் சீரகத் தூளும் மிளகுத் தூளும் சேர்க்கவும். வேர்க்கடலை தூள் சேர்த்துக் கலக்கவும். உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
சுரைக்காய் பச்சடி
தேவையானவை :
சுரைக்காய் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 5 கிராம், இஞ்சி - 5 கிராம், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்த் துருவல் - 100 கிராம், தயிர் - 350 மி.லி., உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 50 மி.லி., தேங்காய் எண்ணெய் - 10 மி.லி., சிவப்பரிசி - 5 கிராம்.
செய்முறை :
சுரைக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். தேங்காயை அரைத்துத் தயிருடன் சேர்க்கவும். இத்துடன் சுரைக்காய் கலவையைச் சேர்க்கவும். கடைசியில் தேங்காய் எண்ணெயில் சிவப்பரிசி மற்றும் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

Post a Comment