0
டிபன் சாப்பிட்ட உடன் காபி அல்லது டீ அருந்துவது நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இப்படி அருந்துவது சத்துகள் உடலில் சேராமல் செய்துவிடும் என்கிறார்களே... உண்மையா?

ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்

இது மிகவும் தவறான பழக்கம். டீ, காபி இரண்டிலுமே கஃபைனின் அளவு அதிகமாக உள்ளது. உணவுக்குப் பிறகு காபி குடிப்பதன்  மூலம் உடல் சில தாதுக்களையும் வைட்டமின்களையும் கிரகித்துக் கொள்ளும் திறனை இழக்கும். கஃபைன் மூளையையும்  நரம்புகளையும் தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும் என்பதாலும், அதைத் தவிர்க்க வேண்டும்.உணவுடன் டீ குடிக்கும் போது, அதிலுள்ள டானின் மற்றும் ஃபெனோலிக் கூட்டானது இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தடை செய்து ரத்தசோகைக்குக் காரணமாகலாம்.

‘அதெல்லாம் முடியாது... எனக்கு சாப்பாட்டுடன் டீ குடித்தே ஆக வேண்டும்’ என்கிறவர்கள், அந்தச் சாப்பாடு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் கொண்டதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதும் இஞ்சி டீ, கிரீன் டீ மற்றும் கிரீன் டீ குடிப்பது சிறந்தது.மற்றபடி கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் தயாரான தயிரைக் கடைந்த நீர்மோரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்து, உணவுடன் குடிப்பது எல்லா வயதினருக்கும் ஏற்றது.

கொழுப்பு நிறைந்த உணவை ஒரு பிடி பிடித்தவர்கள், அதன் பாதிப்பை ஈடுகட்ட சாப்பிட்டதும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.  ஆனால், உணவுடன் ஜூஸ் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது. ஜூஸ் என்பது உணவுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அதுவும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதே சிறந்தது.மற்றபடி காபி, டீ இரண்டிலும் உள்ள நல்ல தன்மைகளை அனுபவிக்க காலையில் ஒன்று அல்லது 2 கப் காபியும், அதன் பிறகு டீயும் குடிக்கலாம். உணவுடன் சேர்த்து அல்ல!

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top