0


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... என்ற பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவரது வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

குறட்டை, தூக்கமின்மை, தூக்கத்தில் உளறுதல், தூக்கத்தில் நடப்பது போன்றவை தூக்கம் தொடர்பான சில பிரச்சனைகளாகும்.ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

தூக்கத்தின் பல்வேறு நிலைகள் நல்ல தூக்கம், அதன் அளவு மற்றும் கனவுகளைக் கூட பாதிக்கிறது. தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் வருமாறு.

குறட்டை :

வயது மற்றும் பாலின வேறுபாடு இன்றி யாருக்கு வேண்டுமானாலும் குறட்டை ஏற்படலாம். வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றோட்டம் பாதிக்கப்படும் போது குறட்டை ஏற்படுகிறது. மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் அதிர்வுதான் குறட்டையாக ஒலிக்கிறது.

தூக்கமின்மை :

தூக்கம் வர மறுப்பது மற்றும் தொடர்ந்து தூக்கத்தை பராமரிக்க முடியாமல் இருக்கும் நிலை தூக்கமின்மை ஆகும். தேவையான அளவு நல்ல தூக்கம் அல்லது நீடித்த தூக்கம் இல்லாமலிருந்தால் இது ஏற்படும். அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது என்ற போதிலும் குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் அதிகம் கவலைப்படுவோரிடம் இது அதிகம் காணப்படுகிறது.

தூக்கத்தில் உளறுதல் :

சிலர் தூக்கத்தில் இருக்கும் போது அவர்களையும் அறியாமல் உளறிக் கொண்டிருப்பார்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களிடமும் காணப்படுகிறது. தூக்கத்தில் உளறுவது என்பது வேடிக்கையாகத் தோன்றினாலும் பல சமயங்களில் இது மோசமாக மாறிவிடக்கூடும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுவது, அழுத்தம் மற்றும் உணர்வு பாதிப்புகள் ஏற்படும்.

தூக்கத்தில் நடத்தல் :

தூக்கத்தில் உளறுவதைப் போன்றே தூக்கத்தில் நடப்பதும் ஒருவர் அறியாமல் செய்யும் செயலாகும். இது குழந்தைகளிடையே அதிகம் உள்ளது. தூக்கத்தில் நடப்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது தூக்கத்தில் ஆழ்ந்த நிலையில்தான் ஏற்படுகிறது. இதனால் தூக்கமின்மை, அழுத்தம், சில மருந்தகளில் பக்கவிளைவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தூக்க பாதிப்புகளை சமாளிக்க சில வழிமுறைகள்

போதுமான தூக்கத்தை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டியது முதலாவது நடவடிக்கையாகும். சரியான நேரத்திற்கு படுக்க சென்று   சரியான நேரத்திற்கு எழுந்து கொள்வதை பழக்கப்படுத்தின் கொள்ள வேண்டும்.

விடுறை நாட்களானாலும் கூட விடியற்காலையில் ஒரே நேரத்தில் விழித்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 பகலில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மன அழுத்தம் தரும் வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
    
தூங்கச் செல்லும் முன்பாக ஆழ்ந்த சுவாசப்பயிற்சி, யோகாசனம் மற்றம் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். வெளிச்சம் குறைந்த, அமைதியான, குளிச்சியான படுக்கை அறையில் நல்ல தூக்கம் வரும். தேவைப்பட்டால் காது மற்றும் கண்களை அதற்கான உபகரணங்கள் கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.

காபி, டி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பு மதுபானம் அருந்துவதோ புகைப்பிடிப்பதோ கூடாது.

சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவரது வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்,நல்லா தூங்கினாதாங்க ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Post a Comment

 
Top