0

பல் வலியை குணப்படுத்த கூடியதும், வயிற்று புழுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டதும், முகப்பருவை போக்க கூடியதுமான கொள்ளுக்காய் வேளையின் மருத்துவ குணங்களை இன்று நாம் பார்ப்போம்.



கொள்ளுக்காய் வேளை, கீழாநெல்லிபோல் சிறிய இலைகளை கொண்டது. நீல நிற பூக்களை கொண்ட கொள்ளுக்காய் வேளையின் இலைகள், காய்கள், வேர்கள் ஆகியவை மருந்தாகிறது. கொள்ளுக்காய் வேளை நுண்கிருமிகளை அழிக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

கொள்ளுக்காய் வேளை காயை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். ஒரு பங்கு விதையை தட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதில் 10 பங்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை என மூன்று வேளை குழந்தைகளுக்கு இதை கொடுப்பதன் மூலம், வயிற்றில் இருக்கும் கொக்கிப் புழு, நாடா புழு, வட்ட புழு, தட்டை புழுக்கள், நாக்குப் பூச்சிகள் வெளியேறும். பெரியவர்கள் 10 முதல் 20 மில்லி வரை பருகலாம்.

கொள்ளுக்காய் வேளை இலைகளை பயன்படுத்தி கட்டிகள், முகப்பருக்களை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். கொள்ளுக்காய் வேளை இலை பேஸ்ட் அரை ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் கசகசா, ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதன் மூலம் முகப்பரு மறையும். மூலம் மற்றும் ரத்த மூலம் குணமாகும். மாதவிலக்கின்போது ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். உள் உறுப்புகளில் ரத்த கசிவுகளை தடுக்கும். கொள்ளுக்காய் வேரை பயன்படுத்தி பல்வலிக்கான கஷாயம் தயாரிக்கலாம்.

கொள்ளுக்காய் வேரை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 அல்லது 3 லவங்கத்தை தட்டி போடவும், கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை பருகினால் பல் வலி குணமாகும். பல் வலியால் ஏற்படும் ஒற்றை தலைவலி சரியாகும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை சரிசெய்யும். கொள்ளுக்காய் வேரை கொண்டு கட்டிகள், பருக்கள், வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் கொள்ளுக்காய் வேர் பொடியுடன், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது பசும்பால் சேர்த்து கலக்க வேண்டும். இதை வலி இருக்கும் இடங்களில் வைத்தால் வலி சரியாகும். வீக்கம் குறையும்.

கொள்ளுக்காய் வேர் பகுதி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. நோய் கிருமிகளை அழிக்க கூடியது. பல் நோய், ஈறு வீக்கம் சரியாகும். வேரை தேனீராக்கி வாய் கொப்பளிப்பது,  பல்பொடிபோல் பயன்படுத்துவதால் பல் வலி குணமாகும். தேனீராக்கி குடிப்பதன் மூலம், தொழுநோய் தடுக்கப்படும். மண்ணீரல், கல்லீரல் நோய் சரியாகும். சிறுநீரை பெருக்கி சிறுநீர் கோளாறு ஏற்படுவது தடுக்கப்படும். இதயத்துக்கு மிகவும் நல்லது.



Post a Comment

 
Top