0

கோடை காலத்தில் அதிகமான வெயில் காரணமாக தோலில் மெலனோசைட்ஸ் என்ற செல்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இதனால் கரும்புள்ளிகள், தோல் வறட்சி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் கோடை வெயில் மூலமாக தோலில் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்க்கலாம். வெயிலினால் தோலில் ஏற்படும் கருமை நிறத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள், சந்தனம், எலுமிச்சை, பன்னீர். தேவையான அளவு சந்தனத்தை தூள் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் பன்னீர் சேர்க்க வேண்டும்.  இதில் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறு தோலின் கருமை நிறத்தை மாற்றக் கூடியது. சந்தனம் தோலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. மேலும் சந்தனம் ஒரு ஆன்டி செப்டிக் ஆகவும் வேலை செய்யக் கூடியது.

இவை கலந்த கலவையை நன்றாக ஒரு பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை தோலில் கருமை நிறம், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும் இடங்களில் மேற்பூச்சாக தடவ வேண்டும். காலை, மாலை இரு வேளையும் இது போல் தடவி விட்டு, சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் விட்டு கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் தோலில் உள்ள கருமை நிறம், கரும்புள்ளிகள் போன்றவை மாற ஆரம்பிக்கும். தோல் பொலிவு பெறும்.

அதே போல் வெயிலால் தோலில் ஏற்படும் கரும்படை போன்ற பிரச்னைகளை மாற்றலாம். இதற்கு தேவையான பொருட்கள், வெங்காயச்சாறு, கடலை மாவு. சின்ன வெங்காயத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் சேர்க்காமல் வெங்காயத்தை மட்டும் அரைத்து சாறு மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையான அளவு கடலை மாவை எடுத்து அதனுடன் சாறை கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை நமது உடலில் தோலின் மீது கரும்புள்ளிகள், கரும் படைகள் இருக்கும் இடத்தில் பூசி வர இவை படிப்படியாக மாறும். வெயில் காலம் மாறும் வரை வாரம் இருமுறை இதை பூசி வர மிகுந்த பயனை அடையலாம்.  15 நிமிடங்களுக்கு பிறகு நீர் விட்டு கழுவி கொள்ளலாம். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் கரும்புள்ளி, கரும்படை மாறும். அதே போல் பப்பாளியை பயன்படுத்தி தோலின் கருமை நிறத்தை மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள், பப்பாளி பழ பேஸ்ட், முல்தானி மட்டி, தயிர். தேவையான அளவு பப்பாளி பழ பேஸ்டோடு முல்தானி மட்டியை சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது தயிரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தொடர்ந்து பூசி வருவதால் தோலின் கருமை மாறும். சுருக்கங்கள் நீங்கும். இவ்வாறு நாம் அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு கோடை வெயிலால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Post a Comment

 
Top