0

பார்ப்பதற்கு கருணைக்கிழங்குக்கு கஸின் பிரதர் மாதிரியும், சேப்பங்கிழங்குக்கு கஸின் சிஸ்டர் மாதிரியும் இருக்கிற  சிறுகிழங்கைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.கிழங்கு என்றாலே உருளையும், சேனையும்தான் என நினைத்துக் கொண்டிருப்போர், ஒருமுறை சிறுகிழங்கை ருசித்துவிட்டால் பிறகு மற்ற கிழங்கு பக்கம் திரும்புவார்களா என்பது சந்தேகம்தான். மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பதற்கேற்ப, சிறுகிழங்கு அத்தனை ருசியானது.

மற்ற கிழங்குகளைப் போல சிறுகிழங்கு எல்லா சீசன்களிலும் கிடைப்பதில்லை. பொங்கலுக்கு மார்க்கெட் முழுக்க குவிந்து  கிடக்கும் சிறுகிழங்கை அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இது கிராமத்து ஸ்பெஷல் என்பதாலும் நகரத்து  வாசிகள் பலருக்கும் இதைப் பற்றியோ, இதன் உபயோகம் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுகிழங்கில் உள்ள நல்ல தன்மைகளை விளக்குவதுடன், அதை வைத்து 3 ஆரோக்கிய உணவுகளையும் நமக்கு இங்கே செய்து  காட்டியிருக்கிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ.சிறுகிழங்குக்கு கூர்கா கிழங்கு, சீமக்கிழங்கு, சிவக்கிழங்கு என வேறு சில பெயர்களும் உண்டு. ஆங்கிலத்தில் இதை Chinese potato என்கிறார்கள். நீளமாகவும், உருண்டையாகவும் 2 இன்ச் அளவில், டார்க் பிரவுன் நிறத்தில் காணப்படுபவை. கேரளத்து மக்களின் விருப்பமான காய்கறிகளில் சிறுகிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இந்த கிழங்கு கிடைக்கும் சீசனில் அவர்கள் தவறவிடுவதில்லை. விதம் விதமான உணவுகளைச் செய்து ருசிப்பார்கள்.

மண் மணக்கும் கிழங்கு என்றே இதைச் சொல்லலாம். என்னதான் சுத்தப்படுத்தினாலும் சிறுகிழங்கில் பூமியின் வாசனையை,  அது விளைந்த மண்வாசனையை முற்றிலும் இழக்காததுதான் இதன் ஹைலைட்டே. அந்த வாசத்துக்கே இரண்டு வாய் சாப்பாடு  கூடுதலாக இறங்கும்.

அதிக  அளவு கார்போஹைட்ரேட்டும்,  புரதச் சத்தையும், அபரிமிதமான ஊட்டச்சத்துகளையும் உள்ளடக்கிய சிறுகிழங்கு, எல்லா வயதினரும் சாப்பிட ஏற்றது.  ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடியது. பார்வைக் கோளாறுகளை
விரட்டக்கூடியது.

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள, இயற்கையான ஆன்டிசெப்டிக்காக வேலை செய்யும். மூல நோய்க்கும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகக் கூடியது. வைட்டமின் சி சத்து போதுமான அளவு இல்லாவிட்டால் நோய் எதிர்ப்புத் திறன் குறையும்.  சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும். பற்கள், எலும்புகள் போன்றவையும் பலமிழக்கும்.  செல்கள் பழுதடையும். மூட்டு வலி வரும். களைப்பாக உணர்வார்கள். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமுமே பாதிப்புக்குள்ளாகும். இதைத் தவிர்க்க Ascorbic acid  அடங்கிய சப்ளிமென்ட்டுகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

சிறுகிழங்கில் இந்த அஸ்கார்பிக் அமிலம் நிறைய உள்ளதால் வைட்டமின் சி பற்றாக்குறையால் உண்டாகும் பல்வேறு பிரச்னைகளும் தவிர்க்கப்படுகின்றன உண்ணும் உணவு ஆற்றலாக மாற்றப்படவும், ரத்த ஓட்டம் சீராகவும் இருக்க நியாசின் என்கிற வைட்டமின் பி3 அவசியம். அதுவும் சிறுகிழங்கில் போதுமான அளவு உள்ளது.

இத்தனை சத்துகளை உள்ளடக்கிய சிறுகிழங்கை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்பதன் மூலம் அதன் முழுப்  பலன்களையும் பெறலாம். மற்ற கிழங்குகளைப் போல வறுவலாகவோ, பொரியலாகவோ சமைத்து உண்பதைவிட, இதில் குழம்பு, கிரேவியாக சமைத்து உண்பது இன்னும் சிறந்தது.

ஆற்றல்     - 20 கி.கலோரிகள்.
சோடியம்     - 133 மி.கி.
கார்போஹைட்ரேட் - 4 கிராம்.
நார்ச்சத்து     - 1 கிராம்.
வைட்டமின் சி     - 3 மி.கி.
கால்சியம்     - 80 மி.கி.

சுத்தம் செய்வது :

சிறுகிழங்கை சுத்தப்படுத்துவது சற்றே சிரமமான வேலை. அதனாலேயே பலரும்  அந்தக் கிழங்கை அடிக்கடி சமைப்பதில்லை.  சிறுகிழங்கை அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.  பிறகு சொரசொரப்பான தரையில் தேய்த்து மேல் பகுதியை  சுத்தம் செய்ய வேண்டும். பிறகு தோல் நீக்கி, இன்னொரு முறை அலசி, வேக வைக்க வேண்டும்.

ஆரோக்கிய ரெசிபி

சிறுகிழங்கு பால்ஸ்

தேவையானவை :

சிறுகிழங்கு -100 கிராம், வெங்காயம்- 50 கிராம், கடலை மாவு- 25 கிராம், பச்சை மிளகாய் - 2, இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,  சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை :

சிறுகிழங்கை சுத்தம் செய்து, வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில்  எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். ஒரு பாத்திரத்தில்  கடலை மாவும், உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கவும். வேக வைத்த கிழங்குடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்து, மசித்து உருண்டைகளாக்கவும். அவற்றை கடலை மாவுக் கரைசலில் முக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

சிறுகிழங்கு கட்லெட்

தேவையானவை :

சிறுகிழங்கு - 100 கிராம், உருளைக்கிழங்கு - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 50 கிராம், சோம்பு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 15 மி.லி., உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது, பிரெட் தூள் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

சிறுகிழங்கையும், உருளைக்கிழங்கையும் தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு,  பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மசித்த  உருளைக்கிழங்கு மற்றும் சிறுகிழங்கை அத்துடன் சேர்த்துப் பிசையவும். விருப்பமான வடிவத்தில் வெட்டவும். பிரெட் தூளில்  புரட்டி, சூடான தோசைக்கல்லில் வைத்து, எண்ணெய் விட்டு, இரு பக்கங்களும் வேகும்படி வாட்டவும். தக்காளி சாஸ் உடன்  பரிமாறவும்.

சிறுகிழங்கு மசாலா அடை

தேவையானவை

சிறுகிழங்கு - 100 கிராம், கொள்ளு - 75 கிராம், வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, சோம்பு - 1/4 டீஸ்பூன், உப்பு -  தேவைக்கேற்ப, சீரகம் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 15 மி.லி., கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.

செய்முறை :

வெறும் கடாயில் கொள்ளு சேர்த்து வறுத்து, பொடித்துத் தனியே வைக்கவும். சிறுகிழங்கை ஏற்கனவே சொன்ன முறையில்  சுத்தப்படுத்தி வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு  சீரகம், உப்பு, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதைக் கொள்ளு மாவில் சேர்க்கவும். வேக வைத்து  மசித்த சிறுகிழங்கையும் கறிவேப்பிலை, கொத்தமல்லியும்  சேர்த்து அளவாகத் தண்ணீர்விட்டு, அடை மாவு பதத்துக்குக்  கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, தயாராக உள்ள மாவை சின்னச் சின்ன அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்  விட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்து தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

Post a Comment

 
Top