0

மணம் மிக்க தாவரமான திருநீற்றுப்பச்சிலையின் முழு பகுதியும் மருத்துவ குணம் கொண்டது. புதுவை, தமிழகத்தில்  வளர்க்கப்படுகிறது. தென் தமிழகத்தில் அதிகளவில் வளர்க்கிறார்கள். பச்சை எனவும், விபூதியிலை எனவும், திருநீற்றுபச்சிலை  எனவும், தஞ்சை பகுதியினர் திருவாட்சி எனவும் அழைக்கின்றனர். இதன் இலையை அரைத்து பற்றிட, உடல் சூட்டால் ஏற்படும்  கட்டிகள் கரையும். இதன் இலையை கசக்கினால் ஏற்படும் மணத்தை நுகர்வதால் 40 வயது தாண்டியவர்களுக்கு ஏற்படும்  தூக்கமின்மை குறைபாடு நீங்கும். இதய நடுக்கம் நீங்கும்.



தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். ஏனென்றால் அத்தகையகொடுமையானது அந்த  வலிகள். அதுவும் ஒற்றை தலைவலி என்பது மிகுந்த வேதனையை கொடுப்பது. சூரியன் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வலியும்  அதிகரிக்கும். குறைந்தது 1 மணி நேரமாவது நரக வேதனையை கொடுக்கும். இவர்கள் இதன் இலையை பறித்து தாய்பால் விட்டு  மென்மையாக அரைத்து அதிகாலையில் வலியுள்ள பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் அதன் பிறகு  அவர்களுக்கு ஒற்றை தலைவலி என்பதே வராது.

கபவாந்தி, ரத்தவாந்தி, உட்பட நாட்பட்டவாந்தியால் துன்பப்படுபவர்கள் இலைச்சாற்றுடன் வெந்நீர் கலந்து அருந்தினால்  படிப்படியாக வாந்தி குறையும். இலைச்சாறு, தேன் சமன் அளவு கலந்து 30 மிலி அளவில் குடித்து வந்தால் மார்புவலி,  மேல்சுவாசம், இருமல், வயிற்றில் உள்ள வாயு ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும். முகப்பருக்கள் உடையவர்கள்  இலைச்சாற்றுடன் வசம்புப் பொடியையும் குழைத்து மூன்று வேளை பூசிவர அவைகள் உடைந்து நீங்கும். தொடர்ந்து  தடவிவந்தால் பருக்களின் வடுக்கள் மறைந்துவிடும்.

பச்சிலை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி, சடாமஞ்சில், வாய்விடங்கம், கசகசா, கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக்கிழங்கு, கோரை  கிழங்கு இவைகளை பொடித்து ஒன்றாக கலந்து கொண்டு எண்ணெயில் குழைத்து பூசி தலை முழுகினால் வியர்க்குரு, சொறி,  கற்றாழை நாற்றம் போகும், உடல் குளிர்ச்சிடையும். வயிற்றில் புண், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற  காரணங்களால் வாயில் புண் ஏற்படும். இவர்கள் இதன் இலையை கைப்பிடி அளவிற்கு பிடித்து மென்று வந்தால் வேக்காடு  தீரும்.

கண் இரப்பையில் ஏற்படும் கட்டிகளுக்கு இலையை கையினால் கசக்கினால் வரும் சாற்றை கட்டியின் மீது பூசவேண்டும். சாறு  காய்ந்தபின் அதன் மீது தொடர்ந்து பூசிவரவேண்டும். இதனால் கட்டிகள் உடைந்து விடும். அதை சுத்தம் செய்து மீண்டும்  சாற்றை பூசி வந்தால் புண் ஆறிவிடும். காது மந்தம், காதுவலி, காதில் சீழ்வடிதல் உடையவர்கள் இதன் இலையை கைகளால்  கசக்கி சாற்றை இரண்டொரு துளி காதில் விட அவை நீங்கும். 5 கிராம் விதையை 100 மிலி தண்ணீரில் போட்டு 3 மணிநேரம்  ஊறவைத்து சாப்பிட வயிற்றுகடுப்பு, ரத்தகழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை ஆகியவை குணமாகும்.

இலைச்சாற்றுடன் சம அளவு பசும்பால் கலந்து காலை மாலை 100மிலி வீதம் குடித்துவந்தால் வெட்டைநோய்கள், மேநோய்  தொடர்பான நோய்கள், நாட்பட்ட கழிச்சல், உள்மூலம், சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இதனால் உடலில்  தேவையற்ற நீரை வெளியேற்றி சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும். இலைகளை அரைத்து சூரணமாக செய்து கொண்டு  மூக்கில் உறிஞ்சுவதால் மூக்கில் உள்ள கிருமிகள் வெளியேறும். இலையை கசக்கி முகர்ந்து அதை தலையணை அடியில்  வைத்து படுத்தால் தலைவலி நீங்கி நன்கு தூக்கம் வரும்.

தேள் கடித்தபின் உண்டாகும் வலிக்கு இலைச்சாற்றை கடிவாயின் மீது பூச கடுப்பு நீங்கும். இதன் விதைகள் சப்ஜா என  அழைக்கப்படுகிறது. இதை கோடைகாலத்தில் நன்னாரி சர்பத்துடன் அருந்துவதால் ஆண்மையைப்பெருக்கும். தேனுடன் சமஅளவு  சாறு எடுத்து ஒரு கரண்டியில் வைத்து சூடாக்கி வெதுவெதுப்பாக குடித்தால் இருமல் கட்டுப்படும். குழந்தைகளுக்கு பயப்படாமல்  கொடுக்கலாம்

Post a Comment

 
Top