லவங்கம் ஒரு சக்தி வாய்ந்த நுண் கிருமி நாசினி. லவங்கப்பட்டையினின்று எடுக்கப்படும் எண்ணெயில் 40 முதல் 50% வரை ‘சின்னமால் டீ ஹைட்’ எனும் வேதிப்பொருள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். லவங்கப்பட்டை வயிற்றுக்கோளாறை சரி செய்யவல்லது. அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமின்றி வயிற்றை அடைத்தது போல் இருக்கும் உணர்வையும் லவங்கப்பட்டை சீர் செய்ய வல்லது.
உணவுப் பாதையில் ஏற்பட்ட புண்களை ஆற்றி செரிமானத்தையும் சீர் செய்கிறது. புற்றுநோய்க் கட்டிகள் உள்பட பல்வேறு கட்டிகளையும் குணமாக்கும் திறன் கொண்டது லவங்கப்பட்டை. நவீன ஆய்வுகள் லவங்கப்பட்டை ரத்தப் புற்றுநோயையும் ‘லிம்ப்போமா’ என்னும் புற்றுநோயையும் கூட குணப்படுத்தவல்லது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. லவங்கப்பட்டையில் ‘மாங்கனீஸ்’ என்னும் தாது உப்பு அதிக அளவு இருப்பதால் மூட்டு வலியைக் குணப்படுத்துகிறது. மாங்கனீஸ் எலும்புகளை பலப்படுத்தக்கூடியது. மேலும் ரத்தத்தையும் இணைப்புத் திசுக்களையும் பலப்படுத்தவல்லது.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மாங்கனீஸ் இன்றியமையாததாக விளங்குகிறது. எலும்புகளின் பலவீனத் தினை தடுக்கும் உன்னத சக்தியை லவங்கப்பட்டை பெற்றுள்ளது.லவங்கப்பட்டை பொடியை நீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து தெளிந்த நீரைக் கொண்டு சமையல் அறை மேடை, தொட்டி, குளிர்சாதனப்பெட்டி, கதவின் கைப்பிடி போன்ற பல்வேறு பொருட்களைக் கழுவுவதால் அவற்றின் மேற்படிந்திருக்கும் கிருமிகள் துடைத்து அழிக்கப்பட்டு தூய்மை பெறுகின்றன. ரசாயன திரவங்களைக் கொண்டு கையைச் சுத்தப்படுத்துவதால் சிலருக்கு கைகளில் புண்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்கள் லவங்கப்பட்டை நீரால் கழுவுவது மிகவும் பாதுகாப்பானது ஆகும்.
லவங்கப்பட்டை சோர்வைப் போக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்டாகவும் விளங்குகிறது. இதிலுள்ள சத்து தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை சேர ஒட்டாமல் தவிர்க்கின்றது. லவங்கப்பட்டை ரத்தத்தை நீர்மைப்படுத்தும் தன்மையையும் பெற்றிருக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் தடையின்றி இயங்க வகை செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகத் திகழும் ரத்தம் உறைந்து ஏற்படும் அடைப்புக்கு வழி இல்லாத வகையில் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்துகிறது. லவங்கப்பட்டையில் இருக்கும் ‘கௌமாரின்’ என்னும் வேதிப் பொருள் இப்பணிக்கு உதவுகிறது. இந்த ‘கௌமாரின்’ ஈரலைப் பாதிக்கக்கூடியது என்பதால் அளவோடு பயன்படுத்த வேண்டும்.
காலில் ஏற்படும் புண்கள், நகம் மற்றும் கால் விரல்களின் இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சைக் காளான்கள் ஆகியவற்றை லவங்கப்பட்டைத் தைலம் குணப்படுத்தக் கூடாது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் சேராவண்ணம் பாதுகாப்பாக நிற்கிறது.
லவங்கப்பட்டை மருந்தாகும் விதம்...
ஒரு பங்கு லவங்கப்பட்டையோடு மூன்று பங்கு காசுக்கட்டி சேர்த்து எண்பது பங்கு நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி இதனின்று 15 முதல் 20 கிராம் வரையில் தினம் மூன்று வேளை உள்ளுக்குக் கொடுத்துவர காலரா குணமாகும்.
லவங்கப்பட்டையோடு சோம்பு, சுக்கு, வாயுவிடங்கம், கிராம்பு ஆகியவை வகைக்கு நான்கு கிராம் என சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சி வடிகட்டி 20 முதல் 30 கிராம் வரையில் அன்றாடம் இரண்டு வேளை குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுப்புண், குன்னம், பூச்சிக்கடி முதலியன குணமாகும்.
லவங்கப்பட்டையின் சூரணத்தை 75 மி.கி. முதல் 250 மி.கி. வரையில் உள்ளுக்குக் கொடுப்பதால் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சேரும் கொழுப்பு ஆகியன குறையும்.
சீதபேதியின் போது லவங்கப்பட்டை சூரணத்தினை 750 மி.கி. அளவு நெய்யுடன் குழைத்து சாப்பிடுவதால் குணம் கிடைக்கும்.
லவங்கப்பட்டை, ஏலரிசி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு 250 மி.கி. முதல் 750 மி.கி. வரை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதால் வாந்தி, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, கழிச்சல், வயிற்றுக்கடுப்பு ஆகியன போகும்.
லவங்கப்பட்டையை பொடித்து நீரிலிட்டு கொதிக்க வைத்து போதிய சூட்டில் வாய் கொப்புளிக்க பல் வலி போகும். வாய் நாற்றம் விலகி பற்கள் ஆரோக்கியம் பெறும். உணவில் மணமும் சுவையும் சேர்ப்பதற்கென எண்ணி இருந்த நமக்கு அது இவ்வளவு மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது என நினைக்கையில் வியப்பாகத்தானே உள்ளது!

Post a Comment