உண்பவர்க்கு ஆயுள் பெருக்கும் நெல்லிக்கனி ஒன்றை ஔவைக்கு அதியமான் கொடுத்த கதை நமக்குத் தெரியும். அதியமான் கொடுத்தது மட்டுமின்றி எல்லா நெல்லிக்குமே அந்த மகத்துவம் உண்டு. இதனை உணர்ந்ததால்தானோ என்னவோ ‘ராஜ கனி’ என்றும் நெல்லியை அழைக்கிறார்கள். Phyllanthus emblica என்பது நெல்லியின் தாவரப் பெயர். Indian gooseberry, Amla ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுவதுண்டு. ஆம்லகி, காயஸ்த்தா, அமோகா, அமிர்தபலா, தாத்ரிபலா, சிவா என்று வடமொழியில் அழைக்கிறார்கள்.
நெல்லிக்கனியில் அபரிமிதமான வைட்டமின் சி அடங்கி இருக்கிறது. தாது உப்புகள், அமினோ அமிலங்கள் ஆகியவையும் மிகுதியாக இருக்கின்றன. ஆப்பிளை விட பன்மடங்கு தாது உப்புகளையும் அமினோ அமிலங்களையும் அதிகமாகப் பெற்று விளங்குகிறது நெல்லி. இதில் உள்ள Phyllemblin எனும் வேதிப்பொருள் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தின் உளைச்சலைப் போக்குவதோடு, கடுப்போடு கூடிய வலியையும் தணிக்கும் குணம் வாய்ந்தது.
நெல்லிக்கனி தசை வளர்ச்சிக்கு உதவக்கூடியது... வாந்தியைத் தணிக்கவல்லது... இருமலை போக்க வல்லது... ரத்தக்கசிவைக் குணப்படுத்தக்கூடியது... பேதியை நிறுத்தக்கூடியது... நீரிழிவைக் கட்டுப்படுத்த வல்லது... மஞ்சள் காமாலை, பசியின்மை, சீதபேதி, பார்வைக் கோளாறு ஆகியவற்றுக்கு மருந்தாகிக் குணம் தரவல்லது... ஜீரண உறுப்புகளுக்கு பெரும் பலமாக அமைகிறது. நெல்லிக்கனியில் உள்ள Superoxide dismutase என்ற வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமையைத் தக்க வைக்க உதவுகிறது.
நெல்லிக்காய் பயன்படுத்தும் விதம் பற்றி இந்திய மருத்துவம் கூறும் வழிமுறைகள்
நெல்லி மர வேரை உலர்த்தி இடித்துச் சூரணித்து அதனோடு மேல்தோல் நீக்கிய எள்ளையும் சேர்த்துச் சாப்பிட மூளை நரம்புகளுக்கு பலம் ஏற்பட்டு ஞாபக சக்தியை மேம்படுத்தும். மூளையின் உறுப்புகளை பலப்படுத்த இது சிறந்த மருந்தாகும்.
நெல்லிச்சாற்றில் இருக்கும் Salicylic acid எனும் அமிலம் சோர்வினைப் போக்கக் கூடியதாக உதவுகிறது. நெல்லிக்கனியும் சாறும் ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தையும் கெட்ட கொழுப்புச் சத்தையும் குறைக்கவல்லது. இதனால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பட்டு இதயம் சீராக இயங்க உதவுகிறது.
நெல்லி விதையைப் பொடித்து உள்ளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். உடலின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கவும் பித்தத்தைத் தணிக்கவும் வாந்தியைப் போக்கவும் இதன் விதையைப் பொடித்துக் கொடுப்பதுண்டு.
நெல்லி விதையை தீநீர் ஆக்கி காய்ச்சலைத் தணிக்க கொடுப்பதுண்டு. மேலும், நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் நெல்லி விதையை தீநீராக்கிக் கொடுப்பர்.
இலைகளை நீரில் இட்டு ஊறவைத்து எடுத்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுவதற்கு உபயோகிப்பர். கண் நோய்கள் பலவும் இதனால் குணமாகும். நெல்லியின் இலை பித்தத்தைப் போக்கவல்லது... ஆஸ்துமாவை தணிக்கக்கூடியது... சளியை நீக்க வல்லது. நெல்லி இலைச்சாறு வாந்தியை நிறுத்தவல்லது.
நெல்லி மரத்தின் வேர் பட்டையைச் சூரணித்து நன்கு சலித்து வைத்துக்கொண்டு தேனில் குழைத்து வாய்ப்புண்களுக்குத் தடவி வர விரைவில் குணமாகும். நெல்லிமரப்பட்டை சூரணத்தை அதிசார பேதிக்கு கொடுக்க அதிவிரைவில் குணம் உண்டாகும். நெல்லி மரத்தின் பச்சை வேர்பட்டைச் சாற்றோடு சிறிது தேனும் சேர்த்துக் கொடுக்கப் பால்வினை நோய் நீங்கும்.
நெல்லி வேரினால் வாந்தி, சுவையின்மை, மலச்சிக்கல், காய்ச்சல் ஆகியன போகும். நெல்லி இலைக்கொழுந்தை அரைத்து மோரில் கலந்து கொடுக்க சீதபேதி குணமாகும்.
நெல்லி இலை கஷாயம் தயார் செய்து ஆறவைத்து கொப்புளிக்க வாய்ப்புண் ஆறிவிடும். நெல்லி இலையை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீருடன் சோம்பு சேர்த்து கொடுக்க பேதி நீங்கிப் போகும்.
நெல்லிமரப் பூக்களைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு கொடுப்பதால் உடல் வெப்பம் தணிவதோடு மலச்சிக்கலும் மறைந்து போகும்.
நெல்லிக்காயை இடித்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சிய தைலம் தலைக்குத் தடவி வருவதால் கூந்தல் கருமையும் மென்மையும் அடர்த்தியுமாக வளரும்.
நெல்லிக்காயை ஊறுகாய் இட்டு சாப்பிட மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலை சுற்றல், வாயில் நீர் அதிகம் சுரத்தல், மலச்சிக்கல் ஆகியன நீங்கும். நெல்லி வற்றல் தீநீர் உடல் உஷ்ணம், பித்த மயக்கம், குமட்டல், பசியின்மை முதலிய நோய்களை குணப்படுத்தும்.
பச்சை நெல்லியை அரைத்து தொப்புளின் கீழ் பூசி வைக்க நீர்க்கட்டு உடையும். சிறுநீர் தாராளமாக இறங்கும். நெல்லிச் சாற்றோடு திராட்சைச் சாறு, தேன் கலந்து பருகுவதால் காய்ச்சல், பேதி, நாவறட்சி ஆகியன குணமாகும்

Post a Comment