0
குழந்தை சிறப்பாகவும் செல்வச் செழிப்போடும் மன நிம்மதியோடும் வாழ வேண்டும் என்பதே பெற்றோரின் கனவு. இதற்கு அவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம்... குழந்தைகளுக்கு நல்ல உடல்நலம் மற்றும் உடல் உறுதியின் முக்கிய அம்சங்களை ஆரம்ப காலத்தில் இருந்தே பொறுமையாக விளக்கி, கடைப்பிடிக்கச் செய்வது மட்டும்தான். வானம் தொடும் கட்டிடம் கட்டும் போது எவ்வளவு ஆழமாக, உறுதியாக அஸ்திவாரம் போடுகிறோமோ அதற்குச் சமமானது இது!


குழந்தைப் பருவத்தில் இருந்து உடல்நலத்தையும் உடல் உறுதியையும் படிப்படியாகக் கூட்டும்போது அவர்களின் உடல் அழகும் உள்ள அழகும் படிப்படியாக கூடிக்கொண்டே போகும். அப்படி வளர்க்காத குழந்தைகள்தான் பிற்காலத்தில் மனநலம் குன்றியவர்களாகவும் வாழ்வில் தோல்வியையே தழுவுகின்றவர்களாகவும் விரக்தி அடைந்து எதையும் வெறுப்பவர்களாகவும், முயற்சியின்மை, என்றும் கவலை, பொறாமை, ஆர்வமின்மை, குற்றவுணர்வு, உடல்நலக் குறைவு என தங்கள் வாழ்வை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

இதனால்தான் பள்ளிகளில் கட்டாய உடற்பயிற்சி வகுப்பை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டியது முக்கியமாகிறது. பள்ளி முடிந்தவுடன் தினமும் பள்ளி மைதானங்களில் குறைந்தது ஒரு மணி நேரமாவது எல்லா குழந்தைகளும் சேர்ந்து பலவித விளையாட்டுகளை, இதர உடல் பயிற்சிகளை, உடற்பயிற்சி ஆசிரியர்களின் கண்காணிப்பில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற சமுதாய ஒற்றுமையை எடுத்துக்கூற, வலுப்படுத்த (Learn With Fun) உடற்பயிற்சி வகுப்புகள் முக்கிய பங்கு வகுக்கும்.

குழந்தைகளின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தரும் மாபெரும் அன்பளிப்பு இது. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை அறியவும் உடற்பயிற்சி வகுப்புகளே உதவும். எதையும் சரியாக, சரியான நேரத்தில், அனைவரும் பாராட்டும்படி சிறப்பாகச் செய்யத் தூண்டும். எனது வெற்றி என் பள்ளிக்கு, ஆசிரியர்களுக்கு, வீட்டுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, மாவட்டத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்கு, ஏன் உலகுக்கே பெருமை தரும் என்ற உயர்ந்த எண்ணம் வளர உதவும். குழந்தைப் பருவ உடல்நலம் மற்றும் உடல் உறுதியானது, மெல்ல மெல்ல மன உறுதியையும் கூட்டி, உடல் அழகை மெருகேற்றி மூன்று பெரும் நன்மைகளை நம் குழந்தைகளுக்கு அளிக்கிறது.

1 உடலையும் மனதையும் எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி, எந்த நேரத்தில் சிறப்பாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறது.

2 உடலின் ஒவ்வொரு உறுப்பின் முக்கியத்துவம், அவற்றைக் கவனத்தோடு பேணிக்காக்க வேண்டியதன் அவசியம், அதன் உறுதிக்குத் தர வேண்டிய முக்கியத்துவம் என அறிந்து, அதன்படி செயல்பட்டு, அதன் மூலமாக மன தைரியமும் பலமும் கூடுகிறது.

3 உடல் உறுப்புகளில் உண்டாகும் வலிகள், காயங்களை அதன் காரணம் அறிந்து, அடுத்த முறை அதுபோல நடக்கக் கூடாது என மனதில் கொண்டு, கவனத்தோடு உடலைப் பாதுகாக்கச் செய்கிறது. நண்பர்களோடு கூடி விளையாடுகையில் உண்டாகும் சில சிறிய சண்டைகள், சச்சரவுகள், கருத்து வேறு பாடுகளை அவ்வப்போதே களைந்து, அந்நட்பு முன்பை விட மேலும் உறுதியாக, வலிமையாக உருவாக வழி வகுக்கிறது. சமுதாயத்தில் எப்படி வாழ்ந்தால் வெற்றி அடைய முடியும் என்பதை அறிய ஆரம்பகால உடற்பயிற்சி வகுப்புகளே வழி வகுக்கின்றன.

குழந்தைகளை தினமும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி, நல்லொழுக்க (Moral) வகுப்பு, ஓவியம், கைவினைகள், இதரப் பயிற்சிகள் (Multi Personality  Extra Curricular Activities) போன்றவை உள்ள பள்ளிகளில் சேர்ப்பதே நல்லது. குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் இந்த வாய்ப்பு பிற்காலத்தில் அவர்களை கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு வெற்றியாளர்களாக உயர்வடையச் செய்வதே உண்மை!

Post a Comment

 
Top