0
அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும். ஊட்டசத்து நிரம்பியது.
சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன்படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதக்கடி

பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டவையாக இருக்கும். அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும். சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.

போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ளவேண்டும். தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.

அதிமதுரம், நாட்டுரோஜா மொக்கு, சோம்பு இவற்றை சம அளவாக எடுத்து இடித்து சலித்து வைத்து கொண்டு இதில் 4 முதல் 6 கிராம் அளவுவரை எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் ஏற்படாது. உடல் சுறுசுறுப்பாக இயங்கும். உள்உறுப்புகளின் சூடு தணியும். ஆண்மை பலவீனம் உடையவர்கள் அதிமதுர சூரணத்தை தொடர்ந்து சாப்பிட ஆண்தன்மை அதிகரித்து பலவீனம் நீங் கும். உடல் பலமும், ஆரோக்கியமும் உண் டாகும். தேனீர் கலந்து கொதிக்கவைத்தும் குடிக்கலாம். அதிமதுரம், அரிசிதிப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தனித்தனியாக பத்து கிராம் எடுத்து கொள்ள வேண்டும்.

இதில் முசு முசுக்கை இலை பத்துகிராம், ஆடாதொடை இலை பத்து கிராம் சேர்த்து 200மிலி தண்ணீரில் போட்டு காய்ச்சி 50மிலி அளவில் சுண்டியதும் வடிகட்டி காலை இரவு இரண்டு வேளை குடித்த வந்தால், நெஞ்சு சளி அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். இருமல் நின்று நலம் கிடைக்கும் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் இதை குடிக்கலாம். கருப்பை தொடர்பான நோய்கள் உள்ள பெண்கள் அதிமதுர சூரணத்தை காலை மாலை தொடர்ந்து சாப்பிட நோய் நீங்கும். பெண் மலடும் நீங்கி குழந்தை பேறு உண்டாகும். வாதபிடிப்பு, சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் ஆமணக்கு நெய்யை தடவி அதில் இலையை ஒட்டிவைத்தால் ஒருவித விறுவிறுப்பு ஏற்படும். படிப்படியாக வலி குறையும்.

மஞ்சள் காமாலை என்னும் கொடிய நோய் பல நேரங்களில் உயிரையும் மாய்த்துவிடும். இதற்கு அதிமதுரம் சங்கம் வேர்பட்டை சமமாக எடுத்து பொடி செய்து எலுமிச்சம் சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரையாக செய்து உலர்த்தி வைத்து கொண்டு பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் மஞ்சள்காமாலை குணமாகும். ஆனால் புளியில்லா பத்தியம் இருக்கவேண்டும்.

சிலர் அருகில் வந்தாலே கற்றாழை நாற்றம் அவர்களை விட்டு விலக சொல்லும். அவர்கள் அதிமதுர இலையை அரைத்து உடலிலும், அக்குளிலும் பூசிவர நாற்றம் நீங்கும். அரைகளில் உண்டாகும் சிரங்குகளுக்கு பூச புண்கள் ஆறும்.

புத்திக்கு வித்திடுஞ் சந்தாபந் தீர்க்கும்
புகைஞ்தெடுக்குஞ் சேட்டுமத்தைப் பித்தரோகத்தை
அத்திப்பற்றினமேகந் தன்னைவா தத்தினை
யறுத்திடும்வச் சிரமென்பா ரதிமதுரந்தனையே’ என்கின்றார் அகத்தியர்.

பெண்களுக்கு பேறுகாலத்தின் போது ஏற்படும் ரத்தபோக்கை கட்டுப்படுத்த அதிமதுரம், சீரகம் சம அளவில் எடுத்து பொடித்துவைத்து கொண்டு 20 கிராம் பொடியை 200மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும்.

இத்தனை பயன்களை கொண்ட அந்த அதிமதுரம் என்பது என்ன தெரியுமா? பிள்ளையார் கண் என்று விநாயகருக்கு கண் வைக்க பயன்படுத்துவோமே அந்த குன்றிமணிசெடிதான். அதிலும் மருத்துவத்திற்கு பயன்படுவது வெள்ளை குன்றிமணியின் வேரும் இலையும்தான். விளையாட்டாக நாம் பயன்படுத்தும் சிறிது நச்சு தன்மை கொண்ட விதைகளின் செடி. தன்னுடைய வேரை மருத்துவ குணம் கொண்டதாக விளங்குவது இயற்கையின் விந்தைதான். அதை அறிந்து, தெளிந்து நமக்கு வழங்கிய முன்னோர்கள் காட்டிய வழியில் தேவைக்கு எற்ப பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

Post a Comment

 
Top