மூங்கில் என்றாலே நினைவுக்கு வருவது புல்லாங்குழலும், ஆயர்பாடி கண்ணனும்தான். அதிலிருந்து வரும் மெல்லிய இசை நம்மை மயக்கி நம் துன்பத்தை நீக்கி புத்துணர்ச்சியை தரும். ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க என மணமக்களை வாழ்த்துவார்கள். மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து பல தலைமுறை மூங்கில்களும் ஒரே புதராக காட்சியளிக்கும். எனவேதான் திருமண பந்தல்கால் நடும்போது மூங்கில் கால் நட்டபிறகுதான் எந்தவிதமான நவீன பந்தலாக இருந்தாலும் அதை அமைப்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.
அமை, அரி, ஆம்பல், ஓங்கல், கண், கனை, கழை, காம்பு, சீசகம், சந்தி, தட்டை, திகிரி, துனை, நேமி, பணை, பாதிரி, புறக்காழ், முடங்கல், முளை, வஞ்சம், வரை, விண்டு, வெதிர், வேரல், வெய், வேல், வேணு, வேழம் என்ற பல்வேறு பெயர்களால் மூங்கில் அழைக்கப் படுகிறது. இலையை சிறிது நீர் தெளித்து இடித்து சாறுபிழிந்து 15 மிலி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை பருகினால் தொடர் இருமல் தீரும். காய்ந்து கிடக்கும் மூங்கில் இலையை கொளுத்தி சாம்பலாக்கி புண்களின் மீது தடவ அவை விரைந்து ஆறும்.
முளைகளை ஊறுகாய் செய்து உண்ண பசியை உண்டாக்கி செரியாமையை போக்கும். எலும்பு முறிவுக்கு மூங்கில் பத்தை வைத்து கட்ட உடனடி குணம் கிடைக்கும். இளங்குருத்துகளை 1பங்கு அளவிற்கு எடுத்து அதனுடன் 20 பங்கு நீர்விட்டு குடிநீரிட்டு குடித்தால் சூதககட்டு, வெள்ளை போகும். மேலும் சுரம், குட்டம் குழந்தைகளின் வயிற்றில் உள்ள சிறு பூச்சிகள் அழியும். மூங்கிலின் இளமுளைகளை நசுக்கிப்பிழிந்து சாறெடுத்து அழுகல் புண்களுக்கு பூசி, பின்னர் அந்த மூங்கிலை சிதைத்து வைத்து அந்த புண்ணில் வைத்து கட்ட அதிலுள்ள பூச்சிகள் வெளியேறி புண்கள் விரைவாக ஆறும்.
மூங்கில் வேரை அரைத்து சொறி சிரங்கு படை முதலியவற்றுக்கு போட்டு வந்தால் அவை குணமாகும். வேரை காய வைத்து குடிநீரிட்டு குடித்து வ ந்தால் சுரம் வெப்பம் தணியும். மூங்கில் அரிசியை வெண்பொங்கலாகவும் சர்க்கரை கூட்டி பாயசாமாகவும் செய்துண்ண அவை உடலுக்கு ஊட்டம் தந்து நோய்களை வர விடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது. அரிசியை உணவு வகைகள் செய்து சாப்பிடும்போது நீரிழிவு நீங்கி நலம் உண்டாகும். ரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
மூங்கிலின் கணுக்களில் படர்ந்துள்ள உப்பு 4 கிராம், திப்பிலி 2 கிராம், ஏலம்1, லவங்கம் அரை கிராம் சர்க்கரை 8 கிராம் பொடித்து போட்டு வேளைக்கு 4 கிராம் அளவில் உண்டு வந்தால் இருமல் இரைப்பு முதலியவை நீங்கும். இளந்தளிர் இலைகளை 5 கிராம் அளவில் எடுத்து 200மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து 50மிலியாக சுண்டியபிறகு குடித்தால் மாதவிலக்கு காலங் களில் வரும் வயிற்றுவலி தீரும். நாக்குபூச்சி தொல்லை, ரத்தவாந்தி, வயிற்றுபுண், மூட்டுவலி, ஆஸ்துமா, பக்கவாதம், நாள்பட்ட காய்ச்சல், கண்நோய்கள், பித்தநோய்கள், சர்க்கரைநோய்கள் உள்ளவர்கள் குடித்து வந்தால் இந்த நோய்கள் கட்டுப்படும்.ஒரு கிராம் விதையை நாள்தோறும் இரண்டு வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. வேரை எரித்து சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து பூசினால் அம்மை தழும்புகள் நீங்கும்.
மூங்கில் அரிசி
சுமார் 40 ஆண்டுகள் வளர்ந்த மூங்கில் பூத்து பின்பு நெல் மணிபோல் காய்த்து அதிலிருந்து அரிசி கிடைக்கிறது. இந்த அரிசியை மலைவாழ் மக்கள் சேகரித்து பயன்படுத்துவதால் அதிக உடல்வலுவுடன் வாழ்வது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதை நாம் மறந்து போனதால் மூங்கில் அரிசி என்றால் ஏதோ ஒரு வகை அரிசி என நினைத்து விடுகின்றோம். காய்த்த பிறகு அந்த மரங்கள் காய்ந்து போகுகிறது. வாழ்நாளில் தன்னுடைய கடமையை நிறைவேற்றி வாழ்நாளை முடித்து கொள்ளும் மூங்கில் தன்னுடைய சந்ததியை வாழவைத்து தன்னுடைய வாழ்வை முடித்து கொள்கிறது.
மூங்கில் உப்பு என்பது அதன் கணுக்களிலிருந்து பெறப்படுகிறது. இந்த மூங்கில் உப்பை 5 கிராம் அளவில் நாள்தோறும் பயன்படுத்தி வந்தால் இதய படபடப்பு, தலைசுற்றல், வயிற்றுபுண், பித்தவாந்தி குணம் பெறும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இதயம், வயிறு, கல்லீரல் வலிமை பெறும்.
இதைத்தான், உயிர்காற்றின் உறைவிடம் இறைவனின் அருட்கொடையாக விளங்குகிற மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது. எனவே மூங்கிலை வளர்த்தால் சுற்றுசூழலை காப்பாற்றலாம் என சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வீடு தோறும் இரண்டு மூங்கிலை வளர்த்தால் போதும் காற்றுமண்டலம் முழுவதும் தூய்மையாகும். மனிதனுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படுகின்ற உயிர்காற்று(ஆக்சிஜன்) 292 கிலோ. ஒரு நாளைக்கு 800 கிராம் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவு ஆகும்.
ஒரு மூங்கில் குத்து ஓரு ஆண்டில் 309 கிலோ உயிர்காற்றை தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். மனிதனின் ஒரு நாள் தேவையை ஒரு மூங்கில் குத்து அளித்துவிடுகிறது. எனவே மூங்கிலை வளர்த்து மனிதகுலத்தை வாழ்விப்போம். என்கிறது அகத்தியர் குணவாடகம். இத்தகைய பெருமை வாய்ந்த மூங்கில் மரமே கிடையாது. அது ஒரு புல்வ கைதான் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மூங்கிலின் மருத்துவ குணத்தை அறிந்து அதன் பயன்பாட்டை நமக்கு சொல்லி சென்ற முன்னோர்கள் வழியை பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
குடற்கட்டுச் சூலையுடன் குன்மம் உதிரம்
உடற்கட்டா தோடி யொழியும்-அடற்றங்கு
வேல்விழிமா தே கேளாய்! வேயின் இலைதனக்குக்
கால்வழியுஞ் சோணிதம் போங் காண்
உதிரபித் தந்தீர்க்கும் ஓங்குசுரத்திற்கும்
அதிவரு கண்ணே யதற்கும்- புதிதாய்க்
கஞ்சி செய்ய லாகுங் கருதிங் சிற்றுண்டியுமாஞ்
செஞ்சிலம்பார் முங்கில் அரிசி
சூதக வாய்வினது சோணிதந்தங் காதுவரு
மாதே கரந்தணியும் வாதம் போகும்பூ- பூதரமேல்
ஓங்கி வளர்ந்திழையு மோங்கலெனு மூங்கிலூ
வாங்குஞ்சு வாசம்போம் வாழ்ந்து’’-
பச்சை தங்கம்
மூங்கிலை இன்று உலகம் பச்சை தங்கம் என்று அழைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க பொருளாக உலகளவில் பரவி வருகிறது. இந்திய காடுகளில் 12.8 சதவீதம் மூங்கில் வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காலம்காலமாக மக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்தி வருகின்றனர். வலுவாகவும், நீண்டநாட்கள் கெட்டுபோகாமலும் இருப்பதால் இதற்கு தனி இடம் உண்டு. குடிசை வீடுகள் கட்டுவதிலிருந்து கட்டிடம் கட்டும் தொழிலுக்கு சாரம் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.

Post a Comment