சிறுதானியமான கம்பு பல்வேறு நன்மைகளை கொண்டது. இது வறண்ட நிலத்தில் வளரக்கூடியது. பெரும்பாலும், பூச்சிகள் தாக்காது என்பதால், இதில் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாடு கிடையாது. கம்பில் நைட்ரஜன் சத்து, மாவு சத்து உள்ளது. உடலுக்கு பலம் தரக்கூடிய இது வயிற்று புண்களை ஆற்றும். கம்புவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடும் கஞ்சி தயாரிக்கலாம்.
ஊற வைத்து அறைத்த கம்புடன், நீர்விட்டு கரைத்த கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கஞ்சி தயாரிக்கவும். ஆறவைத்து மோர் சேர்த்து எடுத்து கொள்ளலாம். உடல் குளிர்ச்சி அடைவதுடன் வெப்பத்தை குறைக்கிறது. பலத்தை தரக்கூடிய சரிவிகித உணவு கம்புவை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் வராது. முத்துபோன்ற தானியமான இது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். உள் உறுப்புகளை தூண்டக்கூடியது.
தாது பலமடையும். கடுமையான வேலை செய்பவர்கள் கம்பு கஞ்சியை குடிக்கும்போது இழந்துபோன பலம் மீண்டும் வருகிறது. புரதம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. கம்புவை பயன்படுத்தி மூலக்கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கம்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதனுடன் எருமை தயிர் சேர்த்து கலந்து கட்டிகளுக்கு மேல் பூச்சாக போடும்போது மூலம் சுருங்கும். ரத்த மூலத்துக்கு நல்ல மருந்து. இதை உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஆசனவாயில் ஏற்படும் சூட்டை தணிக்கும். அரிசி, கோதுமையை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.
வயிற்று புண்களை ஆற்றும். ரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவாக கம்பு விளங்குகிறது. எலும்பு வளரக்கூடிய சுண்ணாம்பு சத்தை கம்பு பெற்றுள்ளது. கம்புவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கான சிற்றுண்டி தயாரிக்கலாம்.
இதற்கான பொருட்கள்: வேகவைத்த கம்பு, நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயப்பொடி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி, வெங்காயம், உப்பு, மிளகுப்பொடி. நல்லெண்ணெயுடன் பெருங்காயப்பொடி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வேக வைத்த கம்பு சேர்க்கவும். பின்னர், கொத்தமல்லி, காரத்துக்காக மிளகு பொடி சேர்த்து கலக்க வேண்டும். இதை சுண்டல் மாதிரி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனை குறைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளும்போது அதிகநேரம் பசி எடுக்காமல் இருக்கும். கோதுமை சூடு என்பதால் அதற்கு பதில் கம்பு பயன்படுத்தலாம். ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் கம்பு, மலச்சிக்கலை போக்கும். கம்புவை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சிற்றுண்டி தயாரிக்கலாம். கம்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொடுக்கலாம்.
கம்பில் இரும்பு, பாஸ்பரஸ் சத்து உள்ளதால் குழந்தைகளின் எலும்பு, நரம்புகளுக்கு நல்லது. கம்பை பயன்படுத்தி பாயசம், கம்பு மாவை கொண்டு லட்டு செய்யலாம். கம்பு ஏழைகளுக்கு, கடின உழைப்பாளிகளுக்கு உணவாகிறது. உடலுக்கு பலம் தருவதுடன், மன உளைச்சலை போக்கும். கம்பை அடிக்கடி சாப்பிடும்போது அல்சர் குணமாகிறது. குடல் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு சரிவிகித உணவாகிறது.
நன்றி
தினகரன்

Post a Comment