0

கோடைகாலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் கை, கால்களில் ஏற்படும் எரிச்சலை தணிப்பது, உடல் உஷ்ணத்தை குறைப்பது, பித்தத்தை சமன்படுத்துவது எப்படி.. மருதாணி இலைகள், வேப்பம் பூ, பாகற்காய் கொடியின் சாறு ஆகியவற்றை கொண்டு கோடைகால நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மருதாணியை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மருதாணி இலைகள், பனங்கற்கண்டு, பால். ஒருபிடி மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி பால் சேர்த்து குடித்துவர  உள் உறுப்புகளின் உஷ்ணம் தணியும். வயிறு, நெஞ்சு எரிச்சல் சரியாகும். இது வெள்ளைப்படுதலுக்கு மருந்தாகிறது. உடல் எரிச்சல் குணமாகும்.

மருதாணியை அரைத்து உள்ளங்கை, கால்களில் பூசினால் பித்தம் தணியும். உடலில் உள்ள உஷ்ணம் குறையும். வெயில் காலத்தில் வாரம் ஒருமுறையாவது மருதாணி வைத்துக் கொண்டால் நன்மை கிடைக்கும். மருதாணி என்பது அழகு சேர்ப்பது மட்டுமல்ல. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மருதாணி நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

நோய் கிருமிகளை தடுக்க கூடியது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. சுட்டெரிக்கும் வெயிலால் வியர்குரு உள்ளிட்டவை ஏற்படும். எனவே, வெப்பத்தில் நம்மை காத்துக்கொள்ள வேண்டிய அவசியம்.   வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பம் பூ, இஞ்சி சாறு, பனங்கற்கண்டு. ஒருவேளைக்கான தேனீர் தயாரிக்க சிறிது வேப்பம் பூவை எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை வடிகட்டி குடித்துவர உடலில் ஏற்படும் பித்தம் சமன்படும். உடல் எரிச்சல் இல்லாமல் போகும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வேப்பம் பூ குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் பித்தம் அதிகரிக்கும். இதனால் உடல் எரிச்சல் ஏற்படும். பாகற்காய் கொடியின் இலைகளை பசையாக அரைத்து, அதன் சாறை உள்ளங்கை, கால்களில் தடவும் போது எரிச்சல் சரியாகும்.

Post a Comment

 
Top