வெயில் காலத்தில் வீட்டில் இருக்கும் போது சிலருக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. ஆனால் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வெயிலில் அலுவலக்தை அடையும் சிலருக்கு தோலில் சற்று அரிப்பு ஏற்படும். சில நேரங்களில் திட்டுத்திட்டாகவும் தோலில் அழற்சி ஏற்படும். இதற்கு போட்டோ அலர்ஜி அல்லது போட்டோ டெர்மடைட்டிஸ் அதாவது சூரிய ஒளி ஒவ்வாமை என்று பெயர். அடுத்து சூரிய கொப்புளம் என்கிற தோல் பாதிப்பு நிலையும் ஏற்படும்.
சூரிய ஒளியில் இருக்கின்ற புற ஊதாக்கதிர்கள் தான் இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த புறஊதாகதிர்கள் கோடை காலத்தில் மட்டும் தான் என்றில்லை, குளிர்காலத்திலும் இருக்கும். ஆனால் அதிக பாதிப்பு கோடைகாலத்தில் தான் என்பதால் அதிக கவனம் இருக்கவேண்டும். சில சமயங்களில் இந்த புறஊதாக்கதிர் பாதிப்பு புற்றுநோய் வரை கூட அழைத்துச் செல்லும் அபாயம் உண்டு.
அடுத்து கோடை காலத்தில் என்பதால் அதிகமாக தோன்றுவது கட்டி, அக்கி, சொறி சிரங்கு, மற்றும் வேர்க்குரு ஆகியவைதான். சொறிசிரங்கு போன்றவற்றில் நீர் வடிந்து சில சமயங்களில் சீழ் பிடிக்கும் வாய்ப்பு அதிகம். அந்த கிருமிகள் உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். மேலும் இந்த கிருமிகள் இரத்தத்தில் கலந்துவி்ட்டால் சில சமயங்களில் சிறுநீரகத்தைகூட தாக்கிவிடும். எனவே சொறி சிரங்கு தானே என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
சில நேரங்களில் அழுத்தமான செயற்றை நூலில் தயாரித்த ஆடைகளை அணிவதால் வியர்வை வெளியேறாமல் போய்விடுகிறது. இந்த வியர்வை அதிகரித்து ஆடைகளில் காற்று மூலம் தூசி படிந்து காளான் கிருமிகளால் படர்தாமரை போன்ற நோய்கள் தோன்றும். இவை பெரும்பாலும் தொடைகளுக்கு இடையிலும் பெண்களுக்கு மார்புகளுக்கு கீழேயும் தோன்றி அரிப்பை உண்டாக்கும். ஆகவே தோலைப் பாதுகாக்கவேண்டும் என்றால் வருடம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது. இது முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் கோடைகாலத்திலாவது கவனமாக இருக்க வேண்டும்.
சூரியஒளி ஓவ்வாமை உள்ளவர்கள் முழுக்கை, முழுக்கால் உடைகள் அணிவது நல்லது. வெளியில் செல்லும்போது குடை பிடிக்கலாம், தொப்பி அணியலாம். சூரிய கொப்புளங்கள் வராமல் தடுக்க புறஊதாக்கதிர்களில் ஏ பி என்று இரண்டு வகை உண்டு. இரண்டுமே தோலை பாதிக்கும். ஆகவே ஸன்ஸ் கிரின் லோஷன் பயன்படுத்துவது நல்லது. அந்த லோஷன்களில் ஜிங்க் ஆக்ஸைடு மற்றும் டைட்டானியம் டைஆக்ஸைடு இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
இந்த ஸன்ஸ் கிரின் லோஷன்கள் அதிகபட்சம் நான்கு மணிநேரம் தான் பயன் அளிக்கும். இந்த இடைவெளியில் மறுபடியும் அவற்றை உபயோகிப்பது நல்லது. தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் சொறி சிரங்கு வேர்க்குருவை தடுக்க முடியும். சொறி சிரங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக சோப் மற்றும் டவல்களை பயன்படுத்துவது நல்லது.
வேர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் குளித்தவுடன் வேர்க்குரு பவுடரை உடம்பு முழுவதும் பூசிக்கொள்வது நல்லது. காளான் போன்ற படர்தாமரை நோய்களை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லிய கைத்தறி ஆடைகளை அணிவதே நல்லது. ஹோமியோபதி மருத்துவத்தில் முகப்பூச்சிற்கும், வெயில் காலத் தோல் அரிப்பை தடுக்கவும் நிறைய கிரீம்கள் உள்ளன. இவை தோலை வியர்வையின்றி பாதுகாக்கும்.
நன்றி
தினகரன்

Post a Comment