சாலையோரங்களில் வளர்ந்து நிழல் தரக்கூடியது ஆல மரம். இது அத்தி வகையை சேர்ந்தது. ஆலமரத்தின் இலைகள் மேல் பூச்சு மருந்தாக பயன்படுகிறது. புண்களை ஆற்ற கூடிய தன்மையை கொண்டது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆலமரத்தின் இலைகள் பழங்கள், வேர்கள், பட்டை, விழுது ஆகியவை மருந்தாகிறது.
ஆலமரத்தின் இலையை ஒடித்தால் கிடைக்க கூடிய பாலை பற்கள், ஈறுகளின் மேல் வைத்தால் அவைகள் பலப்படும். ஆலமரத்தின் பட்டையை பயன்படுத்தி வயிற்று புண், வாய் புண்ணுக்கான மருந்து தயாரிக்கலாம். ஆலமரத்தின் பட்டையுடன் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரை நோய் கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும்.
வெள்ளைபோக்கு பிரச்னை சரியாகும்.ஆலமர விழுதுகள் பல் துலக்க பயன்படுகிறது. இது நோய்களை நீக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூஞ்சை காளான்களை போக்கும். பற்கள், ஈறுகளை பலப்படுத்தும். பற்கள் நீண்டநாட்கள் இருப்பதற்கு விழுது பயன்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் ஆலம் வித்து பொடியை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து குடிக்கலாம்.
ஆலம் வித்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். காய்ச்சிய பாலுடன் ஆலம் வித்து பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இரவில் படுக்கபோகும் முன்பு குடித்துவர குழந்தை இன்மைக்கு மருந்தாகிறது. ஆலமரத்தின் பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். இதனுடன் ஆலம் பழத்தின் பசையை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இது நன்றாக வதங்கிய பின் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர மலச்சிக்கல் சரியாகிறது. அத்தி பழத்தில் உள்ள சத்துக்கள் இதிலும் உண்டு. வைட்டமின், மினரல் உள்ளிட்டவை இருக்கின்றன. குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. ஆலமர இலைகளை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
ஆலமர இலை பசையுடன் தேங்காய் எண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை மேல்பூச்சாக பூசும்போது தோல் நோய்கள் குணமாகும். புண்கள் ஆறும். தோலில் ஏற்படும் கருப்பு தன்மை, அரிப்பு சரியாகிறது. ஆலம் இலைகளை பயன்படுத்துவதால் பல், ஈறுகளை வீக்கம் வற்றிபோகும். பற்கள் உறுதியாக்கும். ஆலம் விழுதால் பல் துலக்குவதால் பற்கள் கெட்டிப்படும். ஆலம் விழுதை இடித்து எண்ணெய்யில் இட்டு காய்ச்சி தலையில் தடவினால் முடி நன்றாக வளரும்.
நன்றி
தினகரன்

Post a Comment