பரபரப்பான தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையும், உணவு பழக்க வழக்கங்களும் நம்மை நோயில் தள்ளி விடுகின்றன. உணவு முக்கியம்தான். ஆனால், எது நல்லது என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. பல ரெடிமேட் உணவுகளில் கெட்டுப் போகாமல் இருக்க பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல. மேலும் இத்தகைய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, படிப்பபையும் பாழாக்கி விடுகிறது.
பீட்சா, பாஸ்தா போன்றவை மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை. ருசிக்காக இவற்றை எப்போதாவது சாப்பிட்டாலும், இவற்றுக்கு பதிலாக கோதுமை உணவுகளை உட்கொள்ளலாம். இவை சீக்கிரமாக குளுக்கோஸாக மாறாது. எண்ணெயில் பொரித்த உணவுகளிலும் சத்து கிடையாது என்பதோடு பல்வேறு அவஸ்தைகள்தான் மிச்சம். ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எண்ணெய். இது பிஸ்கட்டிலும் பிற நொறுக்குத் தீனிகளிலும் அதிகமாக இருக்கும். உணவுப் பொருட்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா நிறுவனங்களும் எண்ணெயில் ஹைட்ரஜனை அதிகம் செலுத்துகின்றன.
டிரான்ஸ்ஃபேட் எனப்படும் இதை நம் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாது. இதை உண்பதால் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிகம் சேரும். இப்படி அதிகமாகும் கெட்ட கொழுப்பினால், காலப் போக்கில் நாளங்கள் கடினமாகிவிடும். பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில உணவுப் பொருட்கள் உங்கள் குழந்தையின் உடல் அமைப்பில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடக் கூடும். ஒவ்வாமை, ஆஸ்த்துமா, அலர்ஜி, கிட்னி பாதிப்புளை ஏற்படுத்திவிடும். நீர்ச்சத்தும் குறையும். இதுபோல் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
எந்த அளவுக்கு நொறுக்குத்தீனிகளை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு ஆரோக்கியம் பாழாகாமல் இருக்கும். இவற்றுக்கு பதிலாக பாதாம், அக்ரூட் போன்ற அதிக சத்துள்ள உணவு பொருட்கள், உடனடி சக்தி கிடைக்கும். வைட்டமின் ஏ, சி, ஈ என மூளைக்கு மிகவும் அவசியமான அனைத்து சத்துகளும் அதில் உண்டு. பேரீச்சம் பழங்கள், கிஸ்மிஸ், அத்திப்பழம் போன்றவை இயற்கை சத்து மிகுந்தவை. எல்லாக் குழந்தைகளுக்குமே உலர் பழங்களும், பருப்புகள் கொடுக்கலாம் அவற்றை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பள்ளிக்கு செல்லும்போதும் அவர்களுக்கு உலர் பழங்கள் போன்றவற்றை கொடுத்து அனுப்புங்கள். எப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பசிப்பது போல் தோன்றுகிறதோ அப்போது ஒன்றிரண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாலே போதுமானது. இதன் மூலம் இயற்கையான வழியிலேயே குழந்தைகளுக்கு அதிக சக்தி எளிதில் கிடைத்துவிடும். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்துக்கு அவர்கள் மாறிவிடுவார்கள். அதிலும் இந்த கோடை காலத்தில் மிகவும் கவனம் அவசியம். நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணலாம். வெயிலில் அதிகம் விளையாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம்தானே அழியாத சொத்து.
நன்றி
தினகரன்

Post a Comment