0

இரண்டு வேளை குளிப்பது, வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல். கற்றாழை, எலுமிச்சையை தேய்த்தும் குளிக்கலாம்.

காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவுககளை ஒதுக்குவது அவசியம். உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், புளிக்குழம்பு போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

நீர்க்காய்களான பீர்க்கு, சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொய்யா, திராட்சை, வெள்ளரி போன்ற பழங்கள் நல்லது. கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு நன்னாரி சர்பத், இளநீர், தர்ப்பூசணி, மோர் போன்றவையும் உகந்தது.

நன்னாரி வேர், வெட்டி வேர், சந்தனச்சக்கைகள் போன்றவற்றை ஊறவைத்த நீரைப் பருகலாம். பிரிட்ஜில் குளிரூட்பட்ட நீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.

அந்தக் கால ஏசி

ஜன்னல்களில் தென்னை, பனையோலை தட்டி அமைத்து அதில் வெட்டிவேர், வேம்பு இலை, புங்கன் இலைகளைச் செருகிவைத்து நீர் தெளித்து அக்காலத்தில் அறைகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாய் குறைந்து உடலுக்கு இதமான குளிர்ச்சியை இயற்கையான முறையில் அனுபவித்தனர்.

வியர்வையை விரட்டும் கதர் ஆடை

கொள்கையால் இல்லாவிட்டாலும் கூட உடையால் சற்று காந்தியை பின்பற்றுவது இக்காலத்திற்குச் சிறந்தது. எனவே ஜீன்ஸ், இறுக்கமான உடைகளைத் தவிர்த்து கதர் ஆடைகளான பருத்தியிலான துணிகளை அணிவதால் உடலுக்கு உரிய காற்றோட்டம் கிடைக்கும். வியர்வையும் உடனுக்கடன் உறிஞ்சப்பட்டு வியர்க்கும் பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.

கோடை உணவு எப்படி இருக்க வேண்டும்...?

வெப்பத்தின் தாக்கத்தினால் சிலருக்கு மயக்கம் ஏற்படும். நீர்ச்சத்து குறைவதனாலே இது போன்ற பாதிப்பு உண்டாகும். எனவே  உணவை வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்துள்ள உணவு, பழங்களை உட்கொள்வதன் மூலம் நீர்சத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இட்லி, பொங்கல் போன்ற நீரை உறிஞ்சும் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

கதவைத் திற.. காற்று வரட்டும்.

வெயில் நேரங் களில் மெத்தை அதிக சூட்டுடன் இருக்கும். எனவே இதில் படுத்து தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஜன்னலைத் திறந்து வைத்து அறைகளில் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இயற்கைக் காற்றின் அளவு அறைகளில் அதிகம் இருக்கும்.

ரத்த அழுத்தம் குறையும்

வெயிலின் உக்கிரத்தால் தோலில் உள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து உடலின் கீழ்பகுதியில் ரத்தம் அதிகம் தேங்கத் துவங்கிவிடுகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் வருவது குறைந்து ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்கு போதுமான ரத்தம் கிடைக்காததால் வெப்பமயக்கம் ஏற்படுகிறது. எனவேதான் வெயிலில் அதிகம் அலைய வேண்டாம் என்று கூறுகின்றனர்.

தாகம் இரண்டு வகைப்படும்

உடல் திரவத்தின் சமநிலையை பராமரிக்கும் கருவியாக நீர் உள்ளது. திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும் போதோ இந்த உணர்வு ஏற்படும். நீரிழப்பு பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். தாக உணர்வு மைய நரம்பு மண்டலத்தால் உணரப்படுகிறது. நீரின் அளவு குறைவு, உப்பின் அடர்த்தி அதிகரிப்பு என்று இரண்டு பிரிவுகளாக தாகம் வகைப்படுத்தப்படுகிறது.

Post a Comment

 
Top