வாழையின் மருத்துவத் தன்மைகள்
வாழைப்பழங்கள் மென்மையான மலமிளக்கியாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் வயிற்றுக்கழிச்சலையும் (Diarrhea), சீதபேதியையும் (Dysentery) தடுத்து நிறுத்துகிறது. குடல் புண்களை விரைவில் ஆற்றும் தன்மையும் வாழைப்பழங்களுக்கு உண்டு. முற்றிய வாழைக்காய் சர்க்கரை நோய்க்கும், வாழைப்பழப்பொடி வயிற்றுக் கோளாறுகளுக்கும் துணை மருந்தாகப் பயன்படுகிறது. வாழையின் வேர் வயிற்றுக் கிருமிகளை ஒழிக்கும் தன்மை கொண்டது.
வாழைச்சாறு குருதிப்போக்கைக் கட்டுப்படுத்தக் கூடியது. வாழைத்தண்டு பித்தத்தை அடக்கவல்லது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. வாழைக்கட்டையை இடித்துப் பெறப்பட்ட நீர் எலும்புறுக்கி நோயைப் போக்கும். வாழைப் பிஞ்சு ரத்தக் கடுப்பு, ரத்த மூலம், அதிமூத்திரம், வயிற்றுப்புண் ஆகியவற்றை குணமாக்கும். வாழை சுவையான உணவாக இருப்பதோடு மட்டுமின்றி உடல் தேற்றியாகவும் விளங்குகிறது. தலைமுடி வளரவும் வாழை நல்ல உணவு. வாழைப்பூ வாத பித்தங்களைத் தணிக்கக் கூடியது. வாழைச்சாறு சிறுநீரகக்கற்களை உடைக்கவல்லது.
மொந்தன் வாழை விந்துவை வளர்க்கக் கூடியது, பித்தத்தைத் தணிக்கக்கூடியது. சிறுநீர் கழிப்பதில் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம், மாதவிலக்குக் கோளாறுகள் ஆகியவற்றை வாழைக்கிழங்கு குணமாக்கும் என ஆயுர்வேத நூல்கள் தெரிவிக்கின்றன. வாழைப்பூவால் ஆஸ்துமா, ரத்தக்கசிவுப் பிரச்னைகள்,வெள்ளைப்போக்கு குணமாகும் எனவும் பல நூல்கள் கூறுகின்றன. வாழை மருத்துவ குணம் கொண்டதுதான் என்றாலும் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது. வயிற்றுவலியும் ஏற்படலாம். அதனால் அளவு தாண்டி உண்ணக்கூடாது.
வாழையை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
வாழைத்தண்டின் சாற்றை லேசாக சூடாக்கி, ஓரிரு சொட்டு காதில் விடுவதால் காதுவலி தணியும். வாழைப்பழத்தோடு நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவதால் மாதவிலக்கின்போது அதிக ரத்த இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். வாழைப்பழத்தைப் பசுவின் கோமியத்தில் கொதிக்க வைத்து உட்கொள்வதால் இருமல், இழுப்பு ஆகிய நோய்கள் குணமாகும். வாழைப்பழத்தை நெருப்பில் இட்டுச் சுட்டும் உண்டாலும் இதே பலன் கிடைக்கும்.
வாழை இலையில் உணவை உட்கொள்வதால் தோல் பளபளப்பும் மென்மையும் பெறும். மேலும் மந்தம், பலமின்மை, இரைப்பு ஆகியவையும் அணுகாவண்ணம் காக்கப்படும். உடல் சூட்டைப் போக்கி குளிர்ச்சியைத் தரும் குணமும் வாழை இலை உணவுக்கு உண்டு.
வாழைத்தளிர் இலையை உலர்த்தித்தீயிலிட்டு சாம்பலாக்கி நெருப்பு அல்லது சுடுநீர்ப்பட்ட காயங்களுக்கு வைத்துக் கட்டினால் காயம் விரைவில் ஆறும். வாழை இலையின் மேல் விளக்கெண்ணெய் தடவி புண் மேல் கட்டி வைத்தாலும் விரைவில் ஆறும்.
வாழைப் பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கை கால் எரிச்சலுக்கு ஒத்தடம் இட்டுப் பின் இதையே மேலே வைத்துக் கட்டுவதால் எரிச்சல் தணியும்.
வாழைப் பூவை இடித்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்ண குருதிப்போக்கு, வெள்ளைப்போக்கு,
வயிற்றுக்கடுப்பு ஆகியன போகும்.
வாழையின் வேர்ப்பகுதியில் உள்ள கிழங்கின் நீரை காலை, மாலை என இருவேளையும் 100 மி.லி. சாப்பிட்டு வருவதால் சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் வெளியாதல், வயிற்றுப்புண், கழிச்சல் ஆகியன வராமல் தடுக்கப் பெறும். தொண்டையில் நின்று துன்பம் தரும் கோழை, அயர்வு, சோகை, என்புருக்கி நோய் ஆகியன குணமாகும்.
வாழைக் கிழங்கை இடித்து அதிலுள்ள நீரைப் பிழிந்து எடுத்துவிட்டுத் திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்துக்
கட்டுவதால் சீக்கிரத்தில் வீக்கமும் கரையும்; வலியும் குறையும்.
தினமும் ஒரு வாழைப்பழம் உண்பவர்களுக்கு சிறுநீரகப் புற்று வராமல் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரியப்படுத்தி உள்ளன. வாழைப்பழத்தில் இருக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடன்ட் பெனோலிக்’ கூட்டுப் பொருட்களே இதற்குக் காரணம் எனவும் தெரிய வருகிறது. நாம் வாழ்வதற்காக தன்னுடைய இலை, பூ, தண்டு என தன் ஒவ்வொரு பகுதியையும் அர்ப்பணிக்கும் வாழை.

Post a Comment