உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. சத்துள்ள டானிக்காக இருக்கிறது. மேல்பூச்சாக போடும்போது வலி, வீக்கத்தை குறைக்கிறது.
தழுதாழையின் இலைகளை கொண்டு வாத வீக்கத்துக்கான மேல்பூச்சு தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணையுடன் தழுதாழை இலைகளை வதக்க வேண்டும். இலைகள் சுருங்கி வரும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும். இதை விரை வாதத்துக்கு மேல்பூச்சு மருந்தாக கட்டிவைக்கலாம். இது நெறிக்கட்டுக்கு மருந்தாகிறது. வாதத்தினால் மூட்டு, கணுக்காலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். வாதம் ஏற்பட்டால் நடக்கவும், பேசவும் முடியாது, கைகால்கள் செயலிழக்கும், மூளையை மழுங்க செய்யும், வாதம் மிகுதியாகும்போது வலி அதிகரிக்கும். தழுதாழை வாதத்தை சரிசெய்யும் மருந்தாகிறது. சிறந்த மூலிகையான தழுதாழை, ரத்த நாளங்களில் அடைப்பு இல்லாமல் செய்கிறது.
சளியை கரைத்து வெளியேற்றி சுவாச பாதையை சீர்செய்கிறது. இருமலை தணிக்கிறது. பசியின்மையை போக்கி பசியை தூண்டுகிறது. தழுதாழை இலைகளை பயன்படுத்தி மூக்கடைப்பு, தலையில் நீர் ஏற்றத்தை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். இலைகள், மஞ்சள் பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அப்போது வரும் ஆவியை பிடிக்கும்போது மூக்கடைப்பு, தலைவலி, தலைசுற்றல், தலைபாரம், கழுத்து வலி பிரச்னைகள் சரியாகும். தழுதாழை அதிக மணம் கொண்டது. இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அதில் கை, கால்களை சிறிதுநேரம் வைத்திருந்தால், வீக்கம், வலி குறையும். அரிசி கழுவிய நீரில் தழுதாழை இலைகளை கொதிக்க வைத்து கழுவினால் அடிபட்ட புண்கள், வீக்கம் தணியும்.
தழுதாழை இலையை பயன்படுத்தி பக்கவாதம், முக வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். நல்லெண்ணையுடன் தழுதாழை இலை பசையை தைலப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும். முக வாதம், பக்கவாதம் இருக்கும் இடத்தில் மஜாஜ் செய்து ஒரு மணிநேரத்துக்கு பின் வெந்நீரில் குளிக்கவும். 80 வகையான வாதத்துக்கு மருந்தாகும் தழுதாழை, பசுமையான இலைகளை உடையது. சாலையோரத்தில் கிடைக்கும் இது வீக்கத்தை கரைக்க கூடியது.
வலியை தணிக்கவல்லது. வாதத்தை சீராக்குகிறது. ரத்தம் தடைபட்டால் வலி ஏற்படும். இதை சரி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உதறுவாதம் சரியாகும். தழுதாழை வேரை பயன்படுத்தி காய்ச்சல், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். 5 முதல் 10 கிராம் அளவுக்கு வேர் எடுத்துக்கொண்டு அதில் பனங்கற்கண்டு, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடிப்பதால், சிறுநீர் வெளியேறுவது சீராகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், வலியை சரி செய்கிறது.
வாதம் அடக்கி என்ற பெயர் கொண்ட தழுதாழை, விரைவாதம், விரைவீக்கம், நறித்தலை வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், முகவாதம் ஆகியவற்றை குணமாக்குகிறது. தேனீராக்கி குடிப்பதன் மூலம் காலராவை தடுக்கலாம். சிறுநீரக கோளாறுகளை சரிசெய்கிறது.

Post a Comment