0

கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் உணர்த்தி, அதிலுள்ள மருத்துவக்  குணங்களையும் பற்றிப் பேசுகிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். கூடவே கருணைக்கிழங்கை வைத்து 3 ஆரோக்கிய  ரெசிபிகளையும் செய்து காட்டுகிறார்.

என்ன இருக்கிறது
ஆற்றல்    -    330 கிலோ கலோரிகள்
கால்சியம்     -    56 மி.கி.
கார்போஹைட்ரேட்     -    18-24%
நார்ச்சத்து    -     8%
நீர்ச்சத்து    -     79%
புரதச்சத்து    -     5%
ஒமேகா 3     -  கொழுப்பு அமிலம் அதிகமுள்ள கிழங்கு இது.

இது மலைப்பிரதேசங்களில் அதிகம் கிடைக்கும் கிழங்கு. இலைகளை கூட வட மாநிலங்களில் சமைப்பார்கள். தென்  மாநிலங்களில் கிழங்கையே பெரிதும் பயன்படுத்துகிறோம். சுவையான இந்த கிழங்கை தேர்ந்தெடுக்கும் போது புதிய கிழங்கை  தேர்ந்தெடுக்க வேண்டும். காய்ந்து விட்டால் நீர்ச்சத்தும் சுவையும் குறைந்து விடும். நறுக்கும் போது கையில் உறையோ (அ)  சிறிதளவு நல்லெண்ணெய் தடவிக் கொண்டோ நறுக்க வேண்டும். சில நேரம் கைகளில் எரிச்சல் உண்டாகும். சமைக்கும் போது  சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து சமைத்தால்  நாக்கு நமைச்சல் தவிர்க்கப்படும். வாங்கிய ஒரு வாரத்துக்குள் சமைப்பது நல்லது.

மருத்துவப் பயன்கள்

பருமன் குறைப்பதற்கு சாதத்துக்குப் பதில் பயன்படுத்தலாம்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுகிறது.

மூல நோய் (Piles) பிரச்னையை குணப்படுத்தப் பயன்படுகிறது.

ரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.

ரத்தம் உறைதலை துரிதப்படுத்துகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கிழங்குகளைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும், கருணைக்கிழங்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும்.

முக்கியமாக 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்னையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது  அதிகப்படுத்துகிறது.

ருமாட்டிசம் எனும் முடக்குவாதம் உள்ளவர்கள் இதை வாரம் 2 முறை சாப்பிட்டால் நோய் குணமாகும். வைட்டமின்  சி சத்தும்  ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் அதிகம் உள்ளன.

மலச்சிக்கலுக்கும் மருந்தாக உதவும்.

கருணைக்கிழங்கு உடலை குளிரச் செய்யும் உணவு என்பதால் ஆஸ்துமா இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

 வாங்க வேண்டும்

பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். கையில் கிளவுஸ் அணிந்தபடி தேர்வு செய்வது, கிழங்கின் மூலம் கைகளில் உண்டாகும் அரிப்பைத் தவிர்க்கும்.

ரெசிபி

பிடிகருணை குழம்பு

தேவையானவை :

பிடிகருணை - 1/4 கிலோ, புளிக்கரைசல் - 1 கப், குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியது - 1, தக்காளி - 1,  மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், பூண்டு - 10 பல், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு,  வெந்தயம் - தாளிக்க, உப்பு - தேவைக்கு.

செய்முறை :

முதலில் கிழங்கை உப்பு, புளிய இலை அல்லது சிறிதளவு புளி சேர்த்து வேக வைக்கவும். பின் தோல் நீக்கி வட்டத் துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பின் பூண்டு வதங்கியதும்,  வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக்கரைசலை சேர்த்து  கொதிக்க விடவும். கெட்டியாகி இறக்கும் முன் 1 டீஸ்பூன் மிளகை ஒன்றும் பாதியுமாக தட்டி சேர்த்து இறக்கவும்.

கருணைக்கிழங்கு புட்டு

தேவையானவை :

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 1, தக்காளி - 1, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,  மஞ்சள்தூள், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுந்து - தாளிக்க. அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் - 30 கிராம், வேர்க்கடலை - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

கருணைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, மஞ்சள் தூள், உப்பு, உளுந்து,  சீரகம் தாளித்து இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். பின்  மசித்த கிழங்கை சேர்த்து வதக்கவும். நன்றாக வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து இறக்கவும். மல்லி இலை தூவி  பரிமாறவும்.

கருணைக்கிழங்கு மஞ்சூரியன்

தேவையானவை :

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ, சோள மாவு அல்லது அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4  டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தக்காளி - 1, வெங்காயம் - 1, குடை மிளகாய் - 100 கிராம், பச்சை  மிளகாய் - 1, பூண்டு - 5 பல், இஞ்சி - 1 சிறிய துண்டு, எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி  சோள மாவு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து  10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு 2 டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.பிறகு தனியே 1 டீஸ்பூன்  எண்ணெயில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கியதும் சிறிது  தண்ணீர் தெளித்து வறுத்து வைத்துள்ள கிழங்கை சேர்த்துக் கிளறவும். அடுத்து பொடியாக நறுக்கிய குடை மிளகாயும் சேர்த்து  வதக்கிப் பரிமாறவும்.


Post a Comment

 
Top