மலைவேம்பின் பழங்கள் மணிகளைபோல இருக்கும். பழங்களும், இலைகளும் மருந்தாக பயன்படுகிறது. மாதவிலக்கு நேரத்தில் வரும் கடுமையான வலியை போக்கும் தன்மை மலைவேம்புக்கு உண்டு. பெண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்யும். இதன் இலைககள் மட்டுமின்றி காய்கள், பட்டைகளும் மருந்தாகின்றன. மலைவேம்பின் இலைகள் ஈட்டி வடிவிலும், பறவைகளின் சிறகுகள் போன்றும் இருக்கும்.
மலைவேம்பை பயன்படுத்தி மாதவிடாய் கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். மலைவேம்பு இலைச்சாறு 10 மில்லி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 50 மில்லி நீர்விட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கவும். அதனுடன் காய்ச்சிய பால், தேன் சேர்க்கவும். இதை குடித்து வந்தால் மாதவிலக்கு தூண்டப்படும். வலியுடன் கூடிய மாதவிலக்கு சரியாகும். கர்ப்பப்பை பலமாகும். மலைவேம்பு இலையை சுத்திகரித்து நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து மாதவிலக்கு ஆன 3, 4, 5வது நாட்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கருத்தரிக்கும் தன்மை ஏற்படும். மலட்டுதன்மை மறைந்து போகும்.
மலைவேம்பின் கனிகள், வேப்பம் பழத்தை போன்று இருந்தாலும் சற்று கடினத்தன்மை பெற்றது. மலைவேம்பு இலைகளை பயன்படுத்தி பேன்களை விரட்டும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன், மலைவேம்பு இலை பசையை சேர்த்து களி போன்று கிளறவும். இலைகள் வெந்தவுடன் பசையை ஆற வைத்து தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை என சுமார் 3 வாரத்துக்கு தலையில் தடவினால் பேன்கள் வராது.
பேன்கள் இறந்து விடும். பொடுகு, அரிப்பு, முடி கொட்டுதல் சரியாகும். பொடுகை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது சொரியாசிஸ் என்னும் தோல்நோயாக மாறிவிடும். ஆரம்ப நிலையிலேயே மலைவேம்பை பயன்படுத்தினால் சொரியாசிஸ் வராது. தலைவலிக்கு மேல்பூச்சு மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம். மலைவேம்பு கிருமிகளை அழிக்க கூடியது. பூச்சிகளை கொல்ல கூடியது. வயிற்று கிறுமிகளை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது. மலைவேம்பு பட்டையை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். மலைவேம்பு மரப்பட்டையின் சிறிய துண்டு ஒன்று எடுத்து கொள்ளவும்.
மரப்பட்டையை நறுக்கி அதனுடன் 10 மிளகு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு செய்தால் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர் தாரைகளில் ஏற்படும் தொற்றுகள் சரியாகும்.
மலைவேம்பு பட்டை சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் மருந்தாகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது போன்றவற்றை சீர்படுத்துகிறது. மலைவேம்பு பட்டை வயிற்று புழுக்களை கொல்லக்கூடியதாக இருக்கிறது.

Post a Comment