0
சுகப்பிரசவமா? சிசேரியனா? இந்தக் கேள்வி எல்லா கர்ப்பிணிகளையுமே விரட்டும். இரட்டைக் கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவத்துக்கான  வாய்ப்புகள் குறைவு என்றாலும், அதற்குக் காத்திருக்கச் சொல்லி ஆயிரம் அறிவுரைகள் தேடி வரும். ‘சிசேரியன்ல குழந்தை பெத்துக்கிறது தான்  சேஃப். சுகப்பிரசவம்கிறது பெயரளவுலதான் சுகம். டெலிவரிக்கு பிறகு ரொம்ப கஷ்டம்...’ என்கிற மாற்றுக் கருத்துக்கும் குறைவிருக்காது.



என்னதான் இன்று சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிற  பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். கர்ப்பத்தின் 8ம் மாதத் தொடக்கம் வரை வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். முக்கிய மான பேட்டிகளுக்கு  வயிற்றுச் சுமையோடு நேரில் செல்வதையே விரும்பினேன். வழக்கமான வீட்டு வேலைகள், வாக்கிங் என எதையும் தவறவிடவில்லை.

‘‘நார்மல் டெலிவரி ஆனாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை. வெயிட் பண்ணிப் பார்ப்போம்’’ என ஆரம்ப மாதங்களில் நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்  மருத்துவர். நிறைமாதம் நெருங்க நெருங்க, ‘வயிறு தளர்ந்து போச்சு... எப்ப வேணா வலி வரலாம். உனக்கு கண்டிப்பா சுகப்பிரசவம்தான்’ என ஆரூடம்  சொன்னவர்களின் வாக்கு எதுவும் பலிக்கவில்லை. ‘‘ரொம்ப ஸாரிம்மா... ஒரு குழந்தை உட்கார்ந்த நிலையிலயும் இன்னொரு குழந்தை படுத்த  நிலையிலயும் இருக்கு. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு ரொம்பக் கம்மி’’ எனக் கடைசி நிமிடத்தில் கலக்கம் கூட்டினார் மருத்துவர். அப்படியே நடந்தது.

‘அதெப்படி ஒருத்தன் உட்கார்ந்துக்கிட்டும் இன்னொருத்தன் படுத்துக்கிட்டும் இருந்திருப்பான்...’ எனப் பல நாட்கள் அந்தக் காட்சியை நான் கற்பனை  செய்து பார்த்ததுண்டு. கருவுக்குள் காணக் கிடைக்காத அந்தக் காட்சியை என் இருவர் பிறந்த பிறகு நேரில் பார்த்து சிலிர்த்திருக்கிறேன். அவர்களை  எடுத்த யதேச்சையான படங்கள் பலதிலும் ஒருவன் படுத்தபடியும் இன்னொருவன் உட்கார்ந்தபடியும் பதிவான பிம்பங்களைக் கண்டு  அதிசயத்திருக்கிறேன்!

‘‘இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பவர்களுக்கும் சுகப்பிரசவம் நிகழலாம். கண்டிஷன்ஸ் அப்ளை’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. கூடவே  இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அம்மாக்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வரும் பிரச்னைகள் பற்றியும் விளக்குகிறார் அவர்.‘‘இரண்டு  குழந்தைகளும் சராசரி எடையுடன் இருக்க வேண்டும். இரண்டு குழந்தைகளின் தலைப்பகுதியும் கீழே இருக்க வேண்டும். ஏற்கனவே குழந்தை பெற்ற  பெண்களுக்கும் அடுத்த கர்ப்பம் சுகப்பிரசவமாகும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், இரண்டு குழந்தைகளையும் சிசேரியனில் எடுப்பதற்கான காரணங்கள் ஏராளம். தலையோ, காலோ, நஞ்சோ குறுக்கே இருக்கலாம்.

கர்ப்பவாயின் கீழே வரலாம். நஞ்சானது பெரிதாக இருக்கலாம். பொதுவாக இரட்டைக் கர்ப்பங்களில் நஞ்சானது கீழே இருக்கும். இரண்டு குழந்தைகள்  என்பதால் நிறைய இடத்தை ஆக்கிரமிக்கும். அதனால் ரத்தப்போக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. முதல் குழந்தைக்கு தலை வந்து அடுத்த  குழந்தைக்கு கால் வந்தாலும் சிசேரியன் தேவைப்படும். இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் அம்மாக்களுக்கு அறுவை சிகிச்சை தொடர்பான  ரிஸ்க்குகளும் அதிகம். அதில் முக்கியமானது ‘அட்டானிக் போஸ்ட்பார்ட்டம் ஹெமரேஜ்’ (Atonic postpartum haemorrhage). கர்ப்பப்பை அளவுக்கு அதிகமாக விரிவடைவதால், பிரசவமான பிறகு சுருங்குவதில் பிரச்னை உண்டாகலாம். அதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்படும்.

நஞ்சு சரியாகப் பிரியாது. கர்ப்பப் பையில் நிறைய நரம்புகள் திறந்த நிலையில் இருக்கும். கர்ப்பப்பை சுருங்காவிட்டால் பனிக்குட நீரும் செல்களும்  இந்த நரம்புகளின் வழியே இதயத்துக்குள் போய், முக்கியமான ரத்த நாளங்களை அடைத்து, ரத்தப் போக்கு தடைபட காரணமாகும். தாய்க்கு  மூச்சுத்திணறல் உண்டாகலாம். இதே பிரச்னை மூளை வரை போகும் போது மூளையில் ரத்தக் கசிவு, வலிப்பு ஏற்பட்டு, தாயின்  உயிருக்கே  ஆபத்தாகலாம்.

ஒரு குழந்தைப் பிரசவத்தில் தாய்க்கு ஏற்படும் ரத்த இழப்பு 500 மி.லி. என்றால் இரட்டைக் கர்ப்பத்தில் அது 750 மி.லி. முதல் 1 லிட்டர் வரை  இருக்கும். சில பெண்களுக்கு இது இன்னும் அதிகரித்து, ரத்தம் ஏற்ற வேண்டிய அளவுக்கு அவசர சிகிச்சையாக மாறலாம். இதையெல்லாம் கருத்தில்  கொண்டுதான் கர்ப்பிணிகள் இரும்புச்சத்துள்ள உணவுகளையும் மாத்திரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையானது 15 நிமிடங்களுக்குள் கிரிக்கெட் பந்து மாதிரி சுருங்க வேண்டும். சுருங்காதவர்களுக்கு அதற்கான  மருந்துகளைக் கொடுத்து முயற்சி செய்வோம். அப்படியும் சுருங்காதவர்களுக்கு கர்ப்பப்பையை நீக்க வேண்டி வரும்.

சுகப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்பும் பெண்கள் அதிலுள்ள சில ஆபத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.  கர்ப்பவாயும், கர்ப்பப்பை வாயும், யோனிக் குழாயும் கிழியும் ஆபத்து இதில் உண்டு. இன்ஃபெக்ஷனுக்கு, குறிப்பாக இடுப்புப் பகுதி தொற்றுகளுக்கு  வாய்ப்புகள் அதிகம். அதன் தொடர்ச்சியாக தாய்க்கு ஜன்னி, சிறுநீரகத் தொற்று வரலாம். கர்ப்பப்பை சுருங்கி கர்ப்பத்துக்கு முந்தைய நிலைக்கு வர  குறைந்தது 6 வாரங்களாகும். அதனால்தான் குழந்தை பெற்ற பெண்களை 6 வாரங்களுக்குப் பூரண ஓய்வெடுக்கச் சொல்கிறோம்.

கர்ப்பம் தரிப்பதற்கு முன் வெறும் மூன்றரை இஞ்ச் அளவுள்ள கர்ப்பப்பையானது பிரசவ நேரத்தில் 32 இஞ்ச் வரை கூட விரிவடையும்.  பிரசவமானதும் அது 27 இஞ்ச்சாக சுருங்கும். பிறகு மெல்ல மெல்ல சுருங்கி, பழைய நிலைக்கு வரும். இதற்கு 6 வார ஓய்வுக்காலம் அவசியம்.  பிரசவத்துக்குப் பிறகான சிவிஏ (செரிப்ரல் வாஸ்குலர் ஆக்சிடென்ட்) பிரச்னையும் ரத்த சோகையும் கூட இவர்களுக்கு சகஜம். ஒட்டுமொத்த  ஆரோக்கியமுமே குறையும். கர்ப்பத்தின் போதும், பிரசவத்துக்குப் பிறகுமான சரிவிகித உணவு, போதிய ஓய்வு, தேவையான ஊட்டச்சத்து மருந்துகள்  மூலமே இழந்து போன அந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்...’’

அழகு இளவரசிகள்!

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று பாடலாம். அப்படித்தான் இருக்கிறது வேலூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரியின் வீடு. ஐஸ்வர்யா, அபிநயா,  அக்ஷயா என உமாவுக்கு மூன்று தேவதைகள். அபிநயாவும் அக்ஷயாவும் இரட்டையர். ‘‘முதல் பொண்ணு பிறந்து அஞ்சு  வருஷம் கழிச்சு அபிநயாவும்  அக்ஷயாவும் பிறந்தாங்க. ரெண்டாவது குழந்தை வேணும்கிற எதிர்பார்ப்பு மட்டும்தான் இருந்தது. ஆணோ, பெண்ணோ எதுவானாலும் ஓ.கே.னு  இருந்தோம். 5வது மாசம் ஸ்கேன் பண்ணினப்பதான் ட்வின்ஸ்னு உறுதியாச்சு. அந்த நிமிஷத்து சந்தோஷத்தை எப்படி வர்ணிக்கிறதுன்னே தெரியலை.

ஒரு பக்கம் அந்த சந்தோஷம்... இன்னொரு பக்கம் ‘ட்வின்ஸா... டெலிவரி ரொம்பக் கஷ்டமா இருக்குமே’ங்கிற பயமுறுத்தல். அதுக்கேத்த மாதிரியே  எக்கச்சக்கமா வெயிட் ஏறி, வயிறு பெரிசாகி நிற்க முடியாம, நடக்க முடியாம சிரமப்பட்டேன். ஒவ்வொரு முறை ஸ்கேன் பண்ணும்போதும் ஆர்வம்  தாங்காம ‘என்ன குழந்தைங்க’னு கேட்பேன். சொல்ல மாட்டாங்க. அப்புறம் ‘ஒண்ணு பொண்ணு... இன்னொண்ணு தெரியலை’ன்னாங்க. 7வது மாச  ஸ்கேன்ல ‘ரெண்டும் பொண்ணு’னு சொன்னாங்க. வீட்ல அத்தனை பேருக்கும் அவ்வளவு சந்தோஷம்.

முதல் பொண்ணு சுகப்பிரசவத்துல பிறந்தாள். ரெண்டாவது பிரசவத்துல ரொம்பவே சிரமப்பட்டேன். முதல் நாள் ராத்திரியே பனிக்குடம்  உடைஞ்சிடுச்சு. ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. சுகப்பிரசவம் நடக்குமானு ரொம்பவே முயற்சி பண்ணினாங்க. முடியலை. அடுத்த நாள்  காலையில 7:40, 7:41க்கு அடுத்தடுத்து ரெண்டு பேரும் பிறந்தாங்க. அதோட என் கஷ்டம் நிக்கலை. டெலிவரி ஆனதும் எனக்கு காய்ச்சல் வந்து 16  நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன். அம்மாவும் மாமியாரும்தான் என் குழந்தைங்களைப் பார்த்துக்கிட்டாங்க. மூணு மாசத்துல எல்லாக் கஷ்டங்களும்  முடிவுக்கு வந்தது.

குழந்தைங்க ரெண்டு பேரும் முகம் பார்த்து சிரிக்கிறது, சிணுங்கிறது, தவழறது, நடக்கறது, பேசறதுனு ஒவ்வொரு கட்டத்துலயும் என்னை  சந்தோஷப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. முதல் பொண்ணை சமாளிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. தங்கச்சிங்க பிறந்ததும் தன்னை  ஒதுக்கறாங்களோனு அவளுக்குள்ள ஒரு ஏக்கம் தலைதூக்க ஆரம்பிச்சது. ‘அப்படியில்லை... உன் தங்கச்சிங்களை நீதான் பார்த்துக்கணும். உனக்குதான்  பொறுப்பு அதிகம்’னு சொல்லிச் சொல்லி வளர்த்தாலும் இப்பவும் அவளுக்குள்ள அந்த ஏக்கம் முழுக்கவும் மறையலை. மூணு பேரும் சண்டையும்  போட்டுக்குவாங்க. அடுத்த பத்தாவது நிமிஷம் சமாதானமும் ஆயிடுவாங்க. அதுதான் அவங்க உலகம்.

3 பேரும் இப்ப கிட்டத்தட்ட ஒரே உயரம் வந்துட்டாங்க. நாங்க நாலு பேரும் சேர்ந்து வெளியில போற போது ஒரே மாதிரி சுடிதார் போட்டுக்கிட்டுப்  போவோம். அத்தனை பேர் பார்வையும் எங்க மேலதான் இருக்கும். அந்தப் பார்வையை எதிர்கொள்றதே ரொம்பப் பெருமையா இருக்கும். இப்பவும்  வெளியில எங்கயாவது ட்வின்ஸை பார்த்தா அவங்கம்மாகிட்ட போய், ‘எப்படி வளர்த்தீங்க... எப்படி சமாளிச்சீங்க’ன்னு அனுபவம் கேட்கற பழக்கம்  எனக்கு உண்டு. அதைக் கேட்கறப்ப என்னை அறியாம என் மனசு பின்னோக்கிப் போகும். அவங்களை வயித்துல சுமந்ததுலேருந்து இப்போ  வரைக்குமான நாட்கள் மலரும் நினைவுகளா வந்து போகும். அந்த நினைப்பே அத்தனை சுகமா இருக்கும்...’’ என்கிற உமா மகேஸ்வரியை மூன்று  பக்கங்களில் இருந்தும் கட்டி அணைத்துக் கொள்கிறார்கள் அவரது அழகு இளவரசிகள்.

உமா  மகேஸ்வரியின் டிப்ஸ்

‘‘பிரசவத்தை பெண்களோட மறுபிறப்புனு சொல்றாங்க. அப்படிப் பார்த்தா ரெட்டைக் குழந்தைங்களைப் பெத்தெடுக்கிற ஒவ்வொரு பெண்ணும் ரெண்டு  முறை மறுஜென்மம் எடுக்கிறாங்க. கருவைச் சுமக்கிற நாள்லேருந்து, பிரசவத்துக்குப் பிறகு சில வருஷங்கள் வரைக்கும் அவங்க சந்திக்கிற  கஷ்டங்களும் உடல், மன அவஸ்தைகளும் கொஞ்ச நஞ்சமில்லை. அத்தனை கஷ்டங்களும் பின்னாள்ல சந்தோஷங்களா மாறும்கிற நம்பிக்கையை  அவங்க இழந்துடக் கூடாது. அவங்க சம்பாதிச்சுக் கொடுக்கப் போற பேர், புகழ், பெருமை எல்லாமே இரட்டிப்பா காத்திருக்கும்...’’

Post a Comment

 
Top